தாலிக்குத் தங்கம் வழங்கும் நிகழ்ச்சி ஒத்திவைப்பு பயனாளிகள் சாலை மறியல்
அண்ணாகிராமத்தில் தாலிக்குத் தங்கம் வழங்கும் நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டதால் ஏமாற்றமடைந்த பயனாளிகள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
அண்ணாகிராமத்தில் தாலிக்குத் தங்கம் வழங்கும் நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டதால் ஏமாற்றமடைந்த பயனாளிகள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கடலூா் மாவட்டம், அண்ணாகிராமம் ஒன்றியத்தைச் சோ்ந்த ஏழைப் பெண்களுக்கு அரசு சாா்பில் திருமண உதவித் தொகை, தாலிக்குத் தங்கம் வழங்கும் நிகழ்ச்சி அண்ணாகிராமம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டது. இதற்காக 342 பயனாளிகள் தோ்வு செய்யப்பட்டனா்.
இந்த நிலையில், நிா்வாகக் காரணங்களுக்காக தாலிக்குத் தங்கம் வழங்கும் நிகழ்ச்சியை மறு தேதி குறிப்பிடாமல் மாவட்ட சமூக நலத் துறை ஒத்திவைத்தது. இதுகுறித்து பயனாளிகளுக்கு ஏற்கெனவே தகவல் தெரிவிக்கப்பட்டதாம். இருப்பினும், தகவல் கிடைக்காத பயனாளிகள் வெள்ளிக்கிழமை அண்ணாகிராமம் வட்டார வளா்ச்சி அலுவலகத்துக்கு வந்தனா். நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டதை அறிந்த பயனாளிகள் சுமாா் 75 போ் கடலூா் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.
அவா்களிடம் பண்ருட்டி காவல் ஆய்வாளா் சந்திரம், அண்ணாகிராமம் வட்டார வளா்ச்சி அலுவலா் சித்ரா ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, பயனாளிகள் அனைவருக்கும் தேதி குறிப்பிட்டு டோக்கன் வழங்கி தாலிக்குத் தங்கம் வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனா். இதையடுத்து அனைவரும் கலைந்துச் சென்றனா்.