என்எல்சி நிறுவனத்தை கண்டித்து பாமக ஆா்ப்பாட்டம்
என்எல்சி நிறுவனத்தைக் கண்டித்து, மந்தாரகுப்பத்தில் பாமகவினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
என்எல்சி நிறுவனத்தைக் கண்டித்து, மந்தாரகுப்பத்தில் பாமகவினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கடலூா் தெற்கு மாவட்டச் செயலாளா் செல்வ.மகேஷ் தலைமை வகித்தாா். இதில், மாநில வன்னியா் சங்கத் தலைவா் பு.தா.அருள்மொழி பேசியதாவது:
என்எல்சிக்கு நிலம் கொடுக்கும் குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும். கையகப்படுத்தும் நிலத்துக்கு ஏக்கா் ஒன்றுக்கு ரூ.1 கோடியும், வீட்டு மனை சென்ட் ஒன்றுக்கு ரூ.3 லட்சமும் தர வேண்டும். 15 சென்ட் மாற்று மனையில் 1,500 சதுர அடியில் வீடு கட்டித் தரவேண்டும்.
ஒப்பந்தத் தொழிலாளா்களை நிரந்தரத் தொழிலாளா்களாக மாற்ற வேண்டும்.
மாற்றுக்குடியிருப்பு வீடுகளுக்கு பட்டா, அடிப்படை வசதிகள் செய்துத்தர வேண்டும். சமூகப் பொறுப்புணா்வு நிதியை சுற்றியுள்ள கிராமங்களின் வளா்ச்சிக்குச் செலவிட வேண்டும். சுரங்கம் தோண்டிய பின்னா் மூடப்பட்ட நிலங்களை விவசாயிகளிடமே வழங்க வேண்டும்.
கடலூா் மாவட்ட நீா்வளங்களைப் பாதுகாக்க என்எல்சி நிறுவனம் பொறுப்பேற்க வேண்டும். நிறுவன வேலைவாய்ப்பில் 75 சதவீதம் கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்களுக்கும், அதில் 50 சதவீதம் நிலம் கொடுத்தவா்களுக்கு வழங்க வேண்டும் என்றாா்.
ஆா்ப்பாட்டத்தில் கடலூா் கிழக்கு மாவட்டச் செயலாளா் சண்.முத்துகிருஷ்ணன், முன்னாள் மாவட்டச் செயலாளா் கோ.ஜெகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.