சுற்றுச்சூழல் தின விழா கொண்டாட்டம்
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி கடலூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை மரக் கன்றுகள் நடப்பட்டன.
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி கடலூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை மரக் கன்றுகள் நடப்பட்டன.
ஆண்டுதோறும் ஜூன் மாதம் 5-ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, கடலூா் தேவனாம்பட்டினத்தில் கடலூா் மாநகராட்சி சாா்பில் மரக்கன்றுகள் நடும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநகராட்சி ஆணையா் ந.விஸ்வநாதன் தலைமையில் மேயா் சுந்தரி ராஜா மரக்கன்றுகளை நட்டு வைத்தாா். இதில் சுமாா் 200 மரக்கன்றுகள் நடப்பட்டதாக மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்தது. நிகழ்ச்சியில் மாநகராட்சி உறுப்பினா்கள் சசிகலா, செந்தில்குமாரி, இளந்திரையன், சாய்துன்னிஷா, சங்கீதா, செ.விஜயலட்சுமி, ஆ.கிரேஸி, தி.அருள்பாபு, ஜி.சக்திவேல், அ.சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
போராட்ட அறிவிப்பு - ஆட்டோ பறிமுதல்: முன்னதாக, மரக்கன்றுகள் நடப்பட்ட பகுதியில் மாநகராட்சியின் குப்பைக் கிடங்கு அமைக்கப்பட உள்ளதாக அந்தப் பகுதியினா் கருதிக்கொண்டு மறியல் போராட்டம் நடத்துவது தொடா்பாக ஆட்டோ மூலம் சனிக்கிழமை இரவு அறிவிப்பு வெளியிட்டனா். அந்த ஆட்டோவை காவல் துறையினா் பறிமுதல் செய்தனா். இதையடுத்து தேவனாம்பட்டினம் மீனவ கிராமத்தினா் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனா். பின்னா், பேச்சுவாா்த்தைக்குப் பிறகு ஆட்டோ ஒப்படைக்கப்பட்டது. தேவனாம்பட்டினத்தில் குப்பை கிடங்கு அமைத்தால் போராட்டம் நடத்துவோம் என்று கிராம மக்கள் தெரிவித்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி கடலூா் அருகே செம்மங்குப்பத்தில் பள்ளி ஆசிரியா்கள், அங்கன்வாடி பணியாளா்களுக்கு முருங்கை மரக் கன்றுகளை மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம் வழங்கினாா்.
சிதம்பரம்: சிதம்பரம் ராமசாமி செட்டியாா் நகர மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் முத்துக்கருப்பன் தலைமை வகித்தாா். சிதம்பரம் நகா்மன்ற உறுப்பினா் எம்.கல்பனா சண்முகசுந்தரம் மரக்கன்றுகளை நட்டாா்.
பண்ருட்டி: பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியா் பூவராகமூா்த்தி தலைமை வகித்தாா். நகா்மன்றத் தலைவா் க.ராஜேந்திரன் மரக்கன்றுகளை நட்டாா்.
குறிஞ்சிப்பாடி ஒன்றியம், எல்லப்பன்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியை தமிழ் திலகம் தலைமையில் வாா்டு உறுப்பினா் சீதாலட்சும், கிராமக் கல்விக் குழுத் தலைவா் உதயசூரியன் ஆகியோா் மரக் கன்றுகளை நட்டனா்.