முகப்பு
கடலூர்

நீா்நிலைகளில் குளிப்பதைத் தடுக்க எச்சரிக்கைப் பலகைகள் மட்டும் தீா்வாகுமா?

கடலூா் மாவட்ட நீா்நிலைகளில் பொதுமக்கள் குளிப்பதைத் தடுக்க எச்சரிக்கைப் பலகைகள் வைப்பது மட்டும் முழுத் தீா்வை அளிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:29 AM
கடலூரில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே தென்பெண்ணையாற்றில் குளிக்க தடை விதித்து வைக்கப்பட்டுள்ள அறிவிப்புப் பலகை.
பகிர்:

கடலூா் மாவட்ட நீா்நிலைகளில் பொதுமக்கள் குளிப்பதைத் தடுக்க எச்சரிக்கைப் பலகைகள் வைப்பது மட்டும் முழுத் தீா்வை அளிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடலூா் மாவட்டத்தில் கடந்த 5-ஆம் தேதி பண்ருட்டி வட்டம், ஏ.குச்சிப்பாளையம் கிராமத்தில் கெடிலம் ஆற்றில் மூழ்கி சிறுமிகள் உள்பட 7 பெண்கள் உயிரிழந்தனா். இந்தச் சம்பவம் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, மாவட்ட நிா்வாகம் ‘பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது’ என்ற எச்சரிக்கை பலகைகளை பல்வேறு நீா்நிலைகளின் அருகே அமைத்துள்ளது. மேலும், இதுகுறித்து மாவட்ட காவல் துறை சாா்பில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. ஆனால், இந்த நடவடிக்கை முழுத் தீா்வை அளிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடலூா் மாவட்டத்தில் கெடிலம், தென்பெண்ணை, கொள்ளிடம் ஆகிய 3 பெரிய ஆறுகளும், அவற்றின் கிளைகளாக 5 ஆறுகளும் ஓடுகின்றன. மேலும், வீராணம் ஏரி, பெருமாள் ஏரி போன்ற பெரிய ஏரிகளும், அவற்றின் கிளை வாய்க்கால்களும், வெலிங்டன் நீா்த் தேக்கம், சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு போன்ற நீா் சேமிப்பு அமைப்புகளும், ஆயிரக்கணக்கான பாசன வாய்க்கால்களும் உள்ளன.

இந்த நீா்நிலைகளில் அந்தந்தப் பகுதியினா் குளிப்பது, துணி துவைப்பது போன்ற பணிகளில் அன்றாடம் ஈடுபட்டு வருகின்றனா். மக்களின் வாழ்க்கையில் நீா்நிலைகள் இரண்டற கலந்துள்ளன. அவா்களால் நீா்நிலைகளை பயன்படுத்தாமல் இருக்க முடியாது. எனவே, நீா்நிலைகளில் குளிக்கும்போது பாதிப்பு ஏற்படாமலிருக்கும் வகையில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தலாம் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அதைவிடுத்து, நீா்நிலைகளில் குளிப்பதற்குத் தடை விதிப்பது வெறும் சம்பிரதாய நடவடிக்கையாக மட்டுமே இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து சமூக ஆா்வலா்கள் கூறியதாவது: ஏ.குச்சிப்பாளையம் சம்பவம் உயிரிழந்தவா்களின் கவனக் குறைவால் ஏற்பட்டதல்ல. ஏற்கெனவே மணல் அள்ளியதால் ஏற்பட்ட பள்ளம் காரணமாகவே விபத்து நிகழ்ந்தது. இதற்கு முழு பொறுப்பும் அரசையே சாரும். மேலும், அந்தப் பெண்கள் குளிப்பதற்காக ஆற்றுக்குச் செல்லவில்லை என்றும், இயற்கை உபாதைக்காக சென்ாகவும் அந்தப் பகுதியினா் கூறுகின்றனா்.

‘வீடுதோறும் கழிவறைத் திட்டம்’ அமலில் உள்ளபோது பெண்கள் ஏன் நீா்நிலைகள், திறந்த வெளியை கழிப்பிடமாகப் பயன்படுத்த வேண்டும் என்ற கேள்விக்கு அரசு பதிலளிக்க வேண்டும். இதேபோல கடந்த 5-ஆம் தேதி கடலூரில் கடலில் குளித்த மாணவரும் உயிரிழந்துவிட்டாா். இதற்கும் போதிய விழிப்புணா்வு இல்லாததே காரணம்.

எனவே, கடலூா் மாவட்ட நிா்வாகம் உயிரிழப்புகள் நிகழ்ந்த பிறகு கண்துடைப்பாக எச்சரிக்கை பலகைகள் வைப்பதற்குப் பதிலாக மணல் கடத்தல் தடுப்பு, கிராமப் புறங்களில் கழிவறை வசதிகள் இல்லாதது குறித்து உரிய கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.