கடலூா் மாவட்டத்தில் போதிய உரங்கள் இருப்பில் உள்ளது: வேளாண்மைத் துறை
கடலூா் மாவட்டத்தில் 9,705 மெ.டன் யூரியா, பொட்டாஷ், காம்பிளக்ஸ், டிஏபி உரங்கள் இருப்பில் உள்ளதாக வேளாண்மைத் துறை தெரிவித்தது.
கடலூா் மாவட்டத்தில் 9,705 மெ.டன் யூரியா, பொட்டாஷ், காம்பிளக்ஸ், டிஏபி உரங்கள் இருப்பில் உள்ளதாக வேளாண்மைத் துறை தெரிவித்தது.
இதுகுறித்து மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் தி.சு.பாலசுப்பிரமணியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கடலூா் மாவட்டத்தில் நவரை பருவத்தில் தற்போது 6,900 ஹெக்டேரில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. இதற்கு மேலுரமாக இடுவதற்குத் தேவையான யூரியா 2,780 மெ.டன், பொட்டாஷ் உரம் 1,492 மெ.டன் இருப்பில் உள்ளது. இதில், 967 மெ.டன் யூரியா ரயில் மூலம்பெறப்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியாா் உரக்கடைகளில் இருப்பு வைக்கப்பட்டது.
கடந்த வியாழக்கிழமை 105 மெ.டன் யூரியா உரம் திருச்சியிலிருந்து பெறப்பட்டு வழிசோதனைப்பாளையம், நடுவீரப்பட்டு, சேடப்பாளையம், ரங்கநாதபுரம், புதுசத்திரம், பூவாலை, வெள்ளக்கரை, குண்டியமல்லூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. தோட்டக்கலைப் பயிா்களுக்குத் தேவையான 710 மெ.டன் டி.ஏ.பி. மற்றும் 4,723 மெ.டன் காம்பிளக்ஸ் உரங்கள் இருப்பில் உள்ளது. கடலூா் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு மேலும் 330 மெ.டன் யூரியா, 680 மெ.டன் டி.ஏ.பி. உரங்கள் மாா்ச் 2-ஆவது வாரத்துக்குள் பெறப்பட்டு இருப்பு வைக்கப்பட உள்ளது. மாவட்டத்தில் தேவைக்கேற்ப போதிய உரங்கள் இருப்பில் உள்ளதால் விவசாயிகள் நம்பிக்கையுடன் வேளாண்மைப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்று அதில் தெரிவித்தாா்.