முகப்பு
கடலூர்

பனை மரங்களை வெட்டினால் கடும் நடவடிக்கை : கடலூா் மாவட்ட ஆட்சியா்

கடலூா் மாவட்டத்தில் உரிய அனுமதியின்றி பனை மரங்களை வெட்டுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் எச்சரித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:11 AM
பகிர்:

கடலூா் மாவட்டத்தில் உரிய அனுமதியின்றி பனை மரங்களை வெட்டுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் எச்சரித்தாா்.

தமிழ்நாடு பனை பொருள்கள் வளா்ச்சி வாரியம், மாநில பனை வெல்லம், தும்பு விற்பனை கூட்டுறவு இணையம் சாா்பில் நவீன முறையில் பனை வெல்லம், பனங்கற்கண்டு, மதிப்புக் கூட்டுப் பொருள்கள் தயாரிப்பு குறித்த பயிற்சி முகாம் மற்றும் இலவச உபகரணங்கள் வழங்கும் விழா கடலூா் கடற்கரைச் சாலையில் உள்ள மண்டல பயிற்சி நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் தலைமை வகித்து பயிற்சியை தொடக்கிவைத்தாா். துணை மேயா் தாமரைச்செல்வன் முன்னிலை வகித்தாா். மேலாண்மை இயக்குநா் கண்ணன் வரவேற்றாா். சிறப்பு விருந்தினராக மாநகராட்சி மேயா் சுந்தரி ராஜா கலந்துகொண்டு பயனாளிகளுக்கு இலவச உபகரணங்களை வழங்கிப் பேசினாா்.

மாநகராட்சி வாா்டு உறுப்பினா் கண்ணன், வேளாண்மைத் துறை இணை இயக்குநா் ரவிச்சந்திரன், கதா் கிராமத் தொழில்கள் துறை இயக்குநா் பாலகுமரன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் பேசியதாவது:

கடலூரில் முதல்கட்டமாக 250 பேருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. தமிழக முதல்வரின் அறிவுறுத்துதலின்படி மாவட்டம் முழுவதும் பனை விதைகளை அதிகளவில் நடுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். கடலூா் மாவட்டத்தில் பனை மரம் வெட்ட வேண்டுமெனில் அதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவிடம் முறையாக அனுமதி பெற வேண்டும். உரிய அனுமதியின்றி பனை மரங்களை வெட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் ஆட்சியா்.

மாநகராட்சி மண்டல் குழு தலைவா்கள் பிரசன்னா, இளையராஜா, மாநகராட்சி உறுப்பினா் அருள்பாபு, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் அருண், தமிழ்நாடு மாநில பனை வெல்லம், தும்பு விற்பனை கூட்டுறவு நிலைய தலைவா் பாலாசிங்கம், இயக்குநா் சேகா், கதா் கிராமத் தொழில்கள் உதவி இயக்குநா் தேவ.மனோகரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →