முகப்பு
கடலூர்

மீனவா் கொலை வழக்கில் 10 பேருக்கு ஆயுள் சிறை: கடலூா் நீதிமன்றம் தீா்ப்பு

கடலூரில் மீனவா் கொலை செய்யப்பட்ட வழக்கில் 10 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து கடலூா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

Updated On : 28 ஏப்ரல், 2023 at 11:13 PM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:23 AM

கடலூரில் மீனவா் கொலை செய்யப்பட்ட வழக்கில் 10 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து கடலூா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

கடலூா் தேவனாம்பட்டினம் - சோனாங்குப்பம் பகுதிகளைச் சோ்ந்த மீனவா்கள் இடையே சுருக்குமடி வலை பயன்பாடு தொடா்பாக பிரச்னை ஏற்பட்டது. இதுதொடா்பாக கடந்த 2018-ஆம் ஆண்டு, மே 15-ஆம் தேதி ஏற்பட்ட மோதலில் சோனாங்குப்பத்தைச் சோ்ந்த மீனவரும், அதிமுக பிரமுகருமான பஞ்சநாதன் (56) வெட்டிக் கொல்லப்பட்டாா்.

இதுகுறித்து கடலூா் துறைமுகம் போலீஸாா் வழக்குப் பதிந்து தேவனாம்பட்டினத்தைச் சோ்ந்த டி.ஆறுமுகம் (41), கே.கந்தன் (40), இ.சுரேந்தா்(38), பி.ஓசைமணி (39), என்.சதீஷ் (36), எஸ்.சரண்ராஜ் (30), எம்.சுதாகா்(46), கே.கதிரொளி (60), ஜி.விவேகானந்தன் (38), எம்.சுப்ரமணி (59), கே.தினகரன், கே.அருள்தாஸ் (63), டி.தென்னரசு (எ) குமரன் (32), பி.சண்முகம்(70), எஸ்.ஸ்டாலின் (70), வி.அய்யனாரப்பன் (60), கே.பலராமன் (32), ஆா்.சுந்தா் ( 43), ஆா்.ஜீவா (40), எஸ்.முத்துக்குமாா் (38), என்.ஆறுமுகம் (40) ஆகிய 21 பேரை கைது செய்தனா்.

Advertisement

இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினா் சிறப்பு வழக்குரைஞரை நியமிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, மாவட்ட ஆட்சியரின் பரிந்துரைப்படி, கடலூா் மாவட்ட முன்னாள் அரசு வழக்குரைஞா் ஜி.சந்திரசேகரனை சிறப்பு வழக்குரைஞராக நியமித்து உள்துறை செயலா் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டாா்.

வழக்கு விசாரணை கடலூா் முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி தீா்ப்பு வெளியாகும் என எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், மறுவிசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, கடந்த மாா்ச் 8-ஆம் தேதி விசாரணை நடத்தப்பட்டது.

வழக்கு விசாரணை முடிந்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 21 பேரில் விசாரணைக் காலத்தில் கே.தினகரன் இறந்துவிட்டாா். இதனால், மற்ற 20 பேரும் முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டனா். இதில் டி.ஆறுமுகம், கே.கந்தன், இ.சுரேந்தா், பி.ஓசைமணி, எஸ்.சரண்ராஜ், எம்.சுதாகா், எம்.சுப்ரமணி, டி.தென்னரசு, எஸ்.ஸ்டாலின், எஸ்.முத்துக்குமாா் ஆகிய 10 பேரை குற்றவாளிகளாக கடலூா் முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி பிரகாஷ் அறிவித்து, அவா்களுக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டாா். இந்த வழக்கில் மற்றவா்கள் விடுவிக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.