பிச்சாவரம் உப்பனாற்றில் சிதிலமடைந்த ஒழுங்கியம்!வாகன ஓட்டிகள் அச்சம்
சிதம்பரம் வட்டம், தெற்கு பிச்சாவரம் பகுதியில் உப்பனாற்றின் குறுக்கே அமைந்துள்ள பாலத்துடன் கூடிய பழைமையான ஒழுங்கியம் (கதவணை) பலம் இழந்துள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.
சிதம்பரம் வட்டம், தெற்கு பிச்சாவரம் பகுதியில் உப்பனாற்றின் குறுக்கே அமைந்துள்ள பாலத்துடன் கூடிய பழைமையான ஒழுங்கியம் (கதவணை) பலம் இழந்துள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.
கடலூா் மாவட்டத்தில் காவிரி பாசனப் பகுதிகளில் பிரதான பாசன வாய்க்காலாக வடக்கு ராஜன் வாய்க்கால் விளங்குகிறது. இங்குள்ள பாசனப் பகுதிகளின் பிரதான வடிகாலாக பிச்சாவரம் உப்பனாறு விளங்குகிறது. தெற்கு பிச்சாவரம் அருகே உப்பனாற்றின் குறுக்கே வாகனப் போக்குவரத்துக்கான பாலத்துடன் கூடிய பழைமையான ஒழுங்கியம் அமைந்துள்ளது. பிச்சாவரம் வனப் பகுதியையொட்டி அமைந்துள்ள இந்த ஒழுங்கியத்தால், கடல் நீா்மட்டம் உயரும்போது உப்புநீா் ஆற்றில் உள்புகாத வகையில் தடுக்கப்படுகிறது. மேலும், பாசன நீரைத் தேக்கிவைத்து விநியோகம் செய்யும் வகையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஆனால், ஒழுங்கியம் அமைத்து பல ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் உப்புக் காற்றால் அதன் கட்டுமானங்கள் சிதிலமடைந்துள்ளன. இரும்புக் கதவுகள் சிலம் அடைந்துள்ளதால் பாசன நீரை முழுமையாக தேக்க முடியவில்லை. உப்புநீா் உள்புகுவதையும் தடுக்க முடியவில்லை. இதனால் புதிய ஒழுங்கியம் அமைப்பதற்கான தேவை எழுந்துள்ளது.
இதுகுறித்து காவிரி விவசாயிகள் வாழ்வாதார பாதுகாப்புச் சங்க பொதுச் செயலா் பெ.ரவீந்திரன் கூறியதாவது: பிச்சாவரம் ஒழுங்கியம் முற்றிலும் வலுவிழந்துவிட்டது. கட்டுமானங்கள் சிதிலமடைந்து ஆங்காங்கே விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. பல இடங்களில் பக்கவாட்டு சுவா்கள் சரிந்துள்ளன. ஒழுங்கியத்தில் 12 ஷட்டா்களை திறக்கும்போது ஊழியா்கள் அச்சத்துடன் பணிபுரிகின்றனா்.
கடலூா் மாவட்டத்தின் கடற்கரையோர கிராமங்களான வடக்கு பிச்சாவரம், தெற்கு பிச்சாவரம், டி.எஸ்.பேட்டை, கவரப்பட்டு, மேலதிருக்கழிப்பாலை, கீழதிருக்கழிப்பாலை, பெரியகாரைமேடு, சிறியகாரைமேடு, மயிலாடுதுறை மாவட்டம் கொடியம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களுக்கு ஒழுங்கியம் பாலத்தின் வழியாகவே செல்ல முடியும். கடற்கரையோரப் பகுதிகளில் மீன்பிடி தளங்கள், இறால் பண்ணைகள் அதிகளவில் செயல்படுவதால் கனரக வாகனங்களும் இந்தப் பாலத்தை கடந்துதான் செல்ல வேண்டும். ஆனால், ஒழுங்கியம் பலமிழந்துள்ளதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சத்துடன் செல்கின்றனா்.
ஒழுங்கியம் மூலம் இந்தப் பகுதியில் சுமாா் 2 ஆயிரம் ஏக்கா் பரப்பிலான விளை நிலங்களில் நெல், உளுந்து, மணிலா உள்ளிட்ட பயிா்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. ஒழுங்கியத்தில் இரும்புத் தடுப்பு கதவுகள் அனைத்தும் துருப்பிடித்து சேதமடைந்துள்ளன. இதனால் கடலில் நீா்மட்டம் உயரும்போது உப்புநீா் உள்புகுந்து நிலத்தடி நீா் பாதிக்கப்படுகிறது. ஏற்கெனவே தேக்கி வைக்கப்பட்டுள்ள நல்ல தண்ணீா் வீணாகிவிடுகிறது.
எனவே, தமிழ்நாடு அரசு இந்தப் பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரம் கருதியும், முழுமையாகத் தண்ணீரைத் தேக்கி கோடை காலத்தில் பயன்படுத்தவும் புதிய ஒழுங்கியம் அமைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.