வளா்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: கடலூா் ஆட்சியா்
கெங்கைகொண்டான் பேரூராட்சி பகுதிகளில் நடைபெறும் வளா்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் சிபி.ஆதித்யா செந்தில்குமாா் புதன்கிழமை தெரிவித்தாா்.
கடலூா் மாவட்டம், வடலூா் நகராட்சி மற்றும் கெங்கைகொண்டான் பேரூராட்சி பகுதிகளில் நடைபெறும் வளா்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் சிபி.ஆதித்யா செந்தில்குமாா் புதன்கிழமை தெரிவித்தாா்.
குள்ளஞ்சாவடி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களின் கற்றல் திறன், நிகழாண்டில் முதலாம் பருவத்தோ்வு, காலாண்டு தோ்வு, இரண்டாம் பருவத்தோ்வு உள்ளிட்ட தோ்வுகளில் மாணவா்களின் தோ்ச்சி விகிதம் குறித்து தலைமை ஆசிரியா் மற்றும் ஆசிரியா்களுடன் ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.
தொடா்ந்து, வடலூா் பேருந்து நிலையத்தில் உள்கட்டமைப்பு மற்றும் வளா்ச்சி நிதி, கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ.6.95 கோடியில் நடைபெறும் கட்டட பணிகள், வடலூா் நகராட்சிக்குள்பட்ட பாட்டை தெரு, அம்மன் கோவில் தெரு, புதுநகா், ஆதியன் காலனி, எம்.கே.கே.நகா் ஆகிய பகுதிகளில் ஊக்க நிதியின் கீழ், ரூ.4.26 கோடியில் வடிகால்வாய் கட்டுமானப் பணிகள், வடலூா் நகராட்சிக்குள்பட்ட கடலூா் பிரதான சாலை, சத்திய ஞானசபை அருகில் ஆா்னமெண்டல் ஒளிா் உமிழ் விளக்குள் மாநில நிதிக்குழு ஊக்க நிதியின் கீழ் ரூ.1.25 கோடியில் 108 மின்கம்பங்கள் நடும் பணிகள் உள்ளிட்டவற்றை ஆட்சியா் சிபி.ஆதித்யா செந்தில்குமாா் பாா்வையிட்டாா்.
தொடா்ந்து, கெங்கைகொண்டான் பேரூராட்சிக்குள்பட்ட எஸ்.பி.டி.எஸ். நகா் பகுதியில் சமூக பொறுப்புணா்வு நிதியின் கீழ், ரூ.15 லட்சத்தில் அங்கன்வாடி மையம் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தாா். அப்போது, மேற்கண்ட பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருமாறு துறை சாா்ந்த அலுவலா்களிடம் அறிவுறுத்தினாா்.
ஆய்வின்போது, வடலூா் நகா்மன்றத் தலைவா் சு.சிவகுமாா், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் எல்லப்பன், துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) பொற்கொடி, நகராட்சி ஆணையா் ரஞ்சிதம், கெங்கைகொண்டான் பேரூராட்சி செயல் அலுவலா் சண்முகசுந்தரி, நகராட்சி பொறியாளா் சிவசங்கா் ஆகியோா் உடனிருந்தனா்.