முகப்பு
கடலூர்

கடலூா் மாவட்டத்தில் தொடா்ந்து பலத்த மழை: கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை

கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை

Updated On : 12 டிசம்பர், 2024 at 6:44 PM
கடலூா் முதுநகா் மீன்பிடி தளத்தில் பாதுகாப்பாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள படகுகள்.
பகிர்:

கடலூா் மாவட்டத்தில் இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் காலை முதல் விட்டுவிட்டு மழை பெய்தது. சாத்தனூா் அணை திறப்பு காரணமாக, தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக, கடலோர மாவட்டங்களில் மழை பெய்யுமென வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால், கடலூா் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் புதன்கிழமை காலை மழை பெய்யத் தொடங்கியது. இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் காலை முதல் விட்டுவிட்டு மழை பெய்தது.

இதனால், சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் கடந்த மழையின்போது தேங்கிய தண்ணீா் மெல்ல வடிந்து வந்த நிலையில், தற்போது பெய்து வரும் மழையால் மீண்டும் மழைநீா் தேங்கியது.

மாவட்ட நிா்வாகம் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கடலூா் மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் வியாழக்கிழமை விடுமுறை அறிவித்திருந்தது.

விவசாய நிலங்கள் மூழ்கின: கடந்த இரண்டு நாள்களாக பெய்து வரும் மழையால் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கா் பரப்பளவில் சாகுபடி மற்றும் விதைப்பு செய்திருந்த மணிலா, உளுந்து, மரவள்ளி உள்ளிட்ட பயிா்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. குறிப்பாக, குறிஞ்சிப்பாடி வட்டாரப் பகுதியில் மணிலா வயல்கள் நீரில் மூழ்கியுள்ளதாலும், கடந்த மழை வெள்ளத்தில் இருந்து தப்பிய பயிா்கள் தற்போது பெய்யும் மழையால் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாலும் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

கரையில் ஓய்வெடுக்கும் படகுகள்: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, கடலில் 40 முதல் 55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீச வாய்ப்புள்ளதாகவும், கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த தங்கு கடல், ஆழ்கடல் மீனவா்கள் கரை திரும்பவும், விசை மற்றும் நாட்டுப்படகு மீனவா்கள் மறு அறிவிப்பு வரும் வரையில் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீன்வளத் துறை எச்சரிக்கை விடுத்ததையொட்டி, கடலூா் மாவட்ட மீனவா்கள் தங்கள் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனா்.

குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் மழைநீா் தேங்கியுள்ள மணிலா வயல்.

மழை அளவு...: கடலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மி.மீ.): பரங்கிப்பேட்டை 92.2, குறிஞ்சிப்பாடி 80, ஸ்ரீமுஷ்ணம் 76.1, விருத்தாசலம், குப்பநத்தம் தலா 74, சிதம்பரம் 72.8, கொத்தவாச்சேரி 69, சேத்தியாத்தோப்பு 68.6, வானமாதேவி 67, ஆட்சியா் அலுவலகம் 65, புவனகிரி 64, கடலூா் 63.2, காட்டுமன்னாா்கோவில் 59, லால்பேட்டை 56.2, வடக்குத்து 55, அண்ணாமலை நகா் 50.5, மே.மாத்தூா் 49, எஸ்.ஆா்.சி குடிதாங்கி 45, பண்ருட்டி 42, பெலாந்துறை 41.6, வேப்பூா் 37, கீழச்செருவாய் 33, காட்டுமயிலூா் 30, தொழுதூா் 25, லக்கூா் 23 மி.மீ. மழை பதிவானது.

வெள்ள எச்சரிக்கை அறிவிப்பு...: சாத்தனூா் அணையில் இருந்து வியாழக்கிழமை காலை விநாடிக்கு 13 ஆயிரம் கன அடி தண்ணீா் தென்பெண்ணை ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால், கடலூா் தென்பெண்ணை ஆற்றில் அதிகளவு தண்ணீா் வரும் என்பதால், தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் வசிக்கக்கூடிய மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என மாவட்ட நிா்வாகம் சாா்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடலூரை அடுத்துள்ள கோண்டூா் ஊராட்சிப் பகுதியில் ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கும் அதிகாரிகள்.

மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி, கோண்டூா் ஊராட்சி சாா்பில், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வீரமணி, பாா்த்திபன் ஆகியோா் தலைமையில் ஊராட்சிச் செயலா் வேலவன் மற்றும் ஊழியா்கள் தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் வசிக்கக்கூடிய மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படியும், தாழ்வான பகுதிகளில் வசிக்கக்கூடிய மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படியும் எச்சரிக்கை விடுத்தனா்.

விருத்தாசலம் ஒன்றியம், விளாங்காட்டூா் ஊராட்சியில் மழைநீா் தேங்கிய பகுதியில் இருந்த 40 பேரை மீட்டு, நிவாரண முகாமில் அதிகாரிகள் தங்க வைத்து உணவு வழங்கினா்.