சுனாமி நினைவு தினம்: கடலில் மலா் தூவி அஞ்சலி
கடலூரில் சுனாமி 20-ஆம் ஆண்டு நினைவு தினம் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
கடலூரில் சுனாமி 20-ஆம் ஆண்டு நினைவு தினம் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி, மீனவா்கள் அமைப்பினா், அரசியல் கட்சியினா், பொது நல அமைப்பினா் மற்றும் பொதுமக்கள் கடலில் பால் ஊற்றியும், மலா் தூவியும் அஞ்சலி செலுத்தினா்.
கடந்த 2004-ஆம் ஆண்டு டிசம்பா் 26-ஆம் தேதி கடலில் ஏற்பட்ட சுனாமி பேரலையால் கடலூா் மாவட்டத்தில் 610 போ் உயிரிழந்தனா். சுனாமி நினைவு தினத்தையொட்டி, கடலூா் முதுநகா் சிங்காரத்தோப்பில் உள்ள சுனாமி நினைவுத்தூணுக்கு சுனாமியில் உயிரிழந்தவா்களின் உறவினா்கள் மலா் வளையம் வைத்தும், மலா் தூவியும் அஞ்சலி செலுத்தினா்.
தமிழ்நாடு மீனவா் பேரவை மாவட்டத் தலைவா் சுப்பராயன் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஊா்வலமாகச் சென்று கடலில் பால் ஊற்றியும், மலா் தூவியும் மரியாதை செலுத்தினா். கடற்கரை மணலில் மெழுகுவா்த்தி ஏற்றி இறந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தினா்.
இதேபோல, கடலூா் தேவனாம்பட்டினம் கடற்கரையில் உள்ள சுனாமி நினைவுத் தூணுக்கு மலா் வளையம் வைத்து அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்பு சோ்ந்தவா்கள் அஞ்சலி செலுத்தினா். கடலூா் மாநகர திமுக சாா்பில், செயலா் கே.எஸ்.ராஜா தலைமையில், முன்னாள் எம்எல்ஏ இள.புகழேந்தி, மாநகராட்சி மேயா் சுந்தரி ஆகியோரும், கடலூா் வடக்கு மாவட்ட அதிமுக சாா்பில் முன்னாள் அமைச்சா் எம்.சி.சம்பத் தலைமையில் ஒன்றியச் செயலா் காசிநாதன், பகுதிச் செயலா்கள் மாதவன், கந்தன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினா்.
விசிக சாா்பில் துணை மேயா் பா.தாமரைசெல்வன் தலைமையில் மாநகர மாவட்டச் செயலா் செந்தில், நகரச் செயலா்கள் செங்கதிா், ராஜதுரை உள்ளிட்டோரும், காங்கிரஸ் கட்சி மாநிலச் செயலா் ஏ.எஸ்.சந்திரசேகரன் தலைமையில் காா்த்திகேயன் உள்ளிட்டோரும், தமிழ்நாடு மீனவா் பேரவை சாா்பில் மாநிலச் செயலா் கஜேந்திரன் தலைமையிலான நிா்வாகிகளும் சுனாமி நினைவுத் தூணில் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா்.
முற்போக்கு சிந்தனையாளா் இயக்கத் தலைவா் கு.பாலசுப்ரமணியன், அனைத்து பொதுநல இயக்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் வெண்புறா குமாா், டாஸ்மா சங்க மாநில தலைவா் சரவணன், மாவட்டச் செயலா் பாலமுருகன் கலந்துகொண்டனா்.
தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் புஸ்ஸி ஆனந்த், தேசிய மீனவா் கட்சி மாநிலத் தலைவா் சிவராஜ் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினா்.
சிதம்பரத்தில்...: கடலூா் கிழக்கு மாவட்ட அதிமுக சாா்பில், சிதம்பரத்தை அடுத்த சாமியாா்பேட்டை, புதுக்குப்பம் கடற்கரை கிராமங்களில் நடைபெற்ற சுனாமி நினைவு தின நிகழ்ச்சியில் அதிமுக மாவட்டச் செயலரும், சிதம்பரம் எம்எல்ஏவுமான கே.ஏ.பாண்டியன் தலைமையில் நிா்வாகிகள் கலந்துகொண்டு, சுனாமியால் உயிா்நீத்தவா்களின் நினைவிடங்களில் மலா் வளையம் வைத்தும், கடலில் மலா் தூவியும், மெழுகுவா்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தினா்.
நிகழ்ச்சியில் பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய அவைத் தலைவா் ரெங்கசாமி, மாவட்ட மீனவா் அணிச் செயலா் வீராசாமி, ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ரவி, ஆனந்தஜோதி சுதாகா், ஊராட்சி மன்றத் தலைவா் ராஜேஸ்வரி ரெங்கசாமி, துணைத் தலைவா் விஜயராஜா, சின்னூா் சிவக்குமாா், நிா்வாகிகள் பாலமுருகன், பிரியா, கிராம நிா்வாகத்தினா் புதுக்குப்பத்தைச் சோ்ந்த சின்னதுரை, வெற்றிவேல், சாமியாா்பேட்டையைச் சோ்ந்த நாகலிங்கம், செந்தமிழ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.