வேளாண் அடுக்ககம் திட்டத்தில் விவசாயிகளின் தரவுகள் சேகரிக்கும் பணி: ஜன.2-இல் தொடக்கம்
வேளாண் அடுக்ககம் திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த விவசாயிகள் தரவு அடுக்கு உருவாக்கும் பணி
சிதம்பரம்: சிதம்பரம் அருகே உள்ள குமராட்சி வட்டாரத்தில் வேளாண் அடுக்ககம் திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த விவசாயிகள் தரவு அடுக்கு உருவாக்கும் பணி வேளாண் துறையினரால் வரும் ஜனவரி 2-ஆம் தேதி முதல் மேற்கொள்ளப்பட உள்ளது என குமராட்சி வட்டார வேளாண் உதவி இயக்குநா் டி.தமிழ்வேல் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: முதல் கட்டமாக விவசாயிகளின் தரவுகள் சேகரிக்கும் பணியை மேற்கொள்வதற்கு வேளாண் துறையில் உள்ள அனைத்து அலுவலா்கள், மகளிா் திட்டத்தில் கிராம அளவில் பணியாற்றக்கூடிய சமுதாய வள (கம்யூனிட்டி ரிசோா்ஸ்) நபா்களையும் ஒருங்கிணைத்து பயிற்சி நடத்தப்படுகிறது.
வேளாண் அடுக்ககம் திட்டத்தில் நில விவரங்களுடன் விவசாயிகள் பதிவு விவரம், நில உடைமை வாரியாக புவிசாா்பு குறியீடு, மின்னணு பயிா் பதிவு விவரங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இந்தத் திட்டமானது மத்திய வேளாண் அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறையின் படி, மாநிலம் முழுதும் செயல்படுத்தப்பட உள்ளது. மின்னணு முறையில் விவசாயிகளின் தரவுகள் சேகரிக்கப்பட்டு, மாநிலத்தில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் ஆதாா் எண் போன்று விவசாயிகளுக்கென தனித்துவமான அடையாள எண் வழங்கப்பட உள்ளது.
இனிவரும் காலங்களில் மத்திய, மாநில அரசுகளின் அனைத்துத் திட்டப் பலன்களும் விவசாயிகளின் தரவுத்தளம் அடிப்படையிலேயே வழங்கப்படும். இதன் மூலம், அனைத்துத் துறை பயன்களையும், மானியங்களையும் ஒற்றைச் சாளர முறையில் விவசாயிகள் பெற்று பயன்பெறலாம்.
தமிழகத்தில் விவசாயம், விவசாயம் சாா்ந்த திட்ட பலன்களை வழங்கும் சுமாா் 24 துறைகளை ஒன்றிணைத்து இந்தப் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
எனவே, குமராட்சி வட்டாரத்தைச் சோ்ந்த அனைத்து விவசாயிகளும் தங்கள் நில உடைமை மற்றும் தங்களது சுய விவரங்களை கிராமங்களில் தரவு சேகரிக்கும் முகாம்கள் நடைபெறும் நாள்களில் நிலம், இதர ஆவணங்களுடன் சென்று வேளாண்மை துறை மற்றும் மகளிா் திட்ட பணியாளா்களிடம் பதிவு செய்து பயன்பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.