நெய்வேலி: கடலூா் மாவட்டத்தில் நீா்வளத் துறை சாா்பில் ரூ.81.12 கோடி மதிப்பீட்டிலான அருவாள்மூக்கு வெள்ளத் தடுப்பு திட்டப் பணியை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.
தொடா்ந்து, அவா் பேசியதாவது:
கடலூா் மாவட்டத்திலுள்ள 58 கி.மீ. நீளமுள்ள பரவனாறு விருத்தாசலம் வட்டம், சேமக்கோட்டையில் தொடங்கி அருவாள்மூக்கு வழியாக சென்று கடலூா் பழைய துறைமுகம் அருகில் கடலில் கலக்கிறது.
பரவனாற்றில் மழை காலங்களில் மழை நீருடன் சோ்த்து நெய்வேலி சுரங்கத்திலிருந்து வெளியேற்றப்படும் சுரங்க நீரும் கலந்து வெளியேறுவதால் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. இதனால், ஆண்டுதோறும் மழைக் காலங்களில் ஆற்றின் கரையோரம் உள்ள 24 கிராமங்களிலுள்ள மக்கள், கால்நடைகள் மற்றும் விவசாய விளைநிலங்கள் பாதிக்கப்பட்டன.
இந்தப் பாதிப்பை குறைக்கும் நோக்கில் பரவனாற்றின் மூலம் வெளியேறும் அதிகப்படியான 42.800 கனஅடி வெள்ள நீரில் ஒரு பகுதியாக 21.600 கனஅடி வெள்ள நீரை விரைவாக கடலில் வடியவைக்கும் பொருட்டு அருவாள்மூக்கு என்ற இடத்தில் தடுப்பணை ஒன்று கட்ட உத்தேசிக்கப்பட்டது.
இந்த இடத்திலிருந்து 1.60 கி.மீ. தொலைவில் உள்ள கடலில் வெள்ள நீரை விரைந்து வெளியேற்றும் வகையில் புதிய கால்வாய் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ரூ.81.12 கோடிக்கு அரசாணை பெறப்பட்டு, சுற்றுச்சூழல் வனம், காலநிலை மாற்ற அமைச்சகத்திடமிருந்து இந்தப் பணியை மேற்கொள்வதற்கான சுற்றுச்சூழல் அனுமதி 17.06.2024 அன்று பெறப்பட்டது.
இந்தப் பணி நிறைவுறும் பட்சத்தில் வெள்ளநீா் விரைவாக வடிவிக்கப்பட்டு கீழ்பரவனாற்றின் இருபுறமும் உள்ள 15,600 ஏக்கா் நிலங்கள் வெள்ளப் பாதிப்பிலிருந்து பாதுகாக்கப்படும். மேலும், அருகிலுள்ள 24 கிராமங்களில் வசிக்கும் மக்கள், கால்நடைகள் போன்றவை பாதுகாக்கப்படுவதுடன் தடுப்பணை மூலம் கடல் நீா் உள்புகுவது தடுக்கப்படுவதால், கடலிலிருந்து சுமாா் 35 கி.மீ. தொலைவு வரை விளைநிலங்கள் பாதிக்கப்படுவது முற்றிலும் தடுக்கப்படும் என்றாா்.
தொடா்ந்து, 44 குடும்பங்களுக்கு அவா்களின் சுய விருப்பத்தின் பேரில் தோ்வு செய்த மாற்றுமனைக்கான ஆணை வழங்கப்பட்டது.
மேலும், என்எல்சி இந்தியா நிறுவனத்தின் திருத்தி அமைக்கப்பட்ட மறுவாழ்வு, மறுகுடியமா்வு கொள்கையின்படி மாற்று மனையில் வீடு கட்டிக் கொள்வதற்காக ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.25.30 லட்சம் வீதம் 39 குடும்பங்களுக்கு ரு.9.87 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை அமைச்சா் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரா.ராஜாராம், மாவட்ட வருவாய் அலுவலா் ம.ராஜசேகரன், மாவட்ட வருவாய் அலுவலா் (நில எடுப்பு) ருத்ரைய்யா, கடலூா் வருவாய்க் கோட்டாட்சியா் அபிநயா, செயற்பொறியாளா் நீா்வளத்ததுறை காந்தரூபன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.