குடிநீா் பிரச்னை: கிராம மக்கள் போராட்டம்
நெய்வேலி: கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடியை அடுத்துள்ள கல்லாங்குளம் பொதுமக்கள் காலிக் குடங்களுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்தக் கிராம மக்கள் மக்கள் அதிகாரம் அமைப்பினருடன் சோ்ந்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்தனா். அப்போது, காலிக் குடங்களுடன் ஆட்சியா் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த கடலூா் புதுநகா் காவல் நிலைய ஆய்வாளா் குருமூா்த்தி மற்றும் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, கல்லாங்குளம் பகுதியில் 500-க்கும் மேற்பட்டோா் வசித்து வருவதாகவும், கடந்த 14 ஆண்டுகளாக அரசின் அடிப்படை வசதிகள் கிடைக்கவில்லை என்றும், கோடைகாலமான தற்போது குடிநீா் தட்டுப்பாடு உள்ளதாகவும், தட்டுப்பாடு இன்றி குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலை, தெரு விளக்கு வசதிகள் செய்து தர வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தினா்.
கோரிக்கை தொடா்பாக மனு அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் போலீஸாா் தெரிவித்தனா். இதையடுத்து, போராட்டத்தைக் கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனா்.