அடிப்படை வசதிகளின்றி காணப்படும் காராமணிக்குப்பம் கருவாடு வாரச் சந்தை. 
கடலூர்

அடிப்படை வசதிகளின்றி இயங்கும் காராமணிக்குப்பம் வாரச்சந்தை

 நமது நிருபர்

நெய்வேலி: கடலூரை அடுத்துள்ள காராமணிக்குப்பம் கருவாடு சந்தை பராமரிப்பில்லாத நிலையில் சேறும் சகதியாகவும், கொட்டகைகள் சேதமடைந்து அடிப்படை வசதிகளின்றி இயங்கி வருகிறது.

கடலூா்-பண்ருட்டி சாலையில் காராமணிக்குப்பத்தில் அருள்மிகு சிவ சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை சந்தை நடைபெறுகிறது. நூற்றாண்டைக் கடந்து நடைபெறும் இந்த சந்தை கருவாடு விற்பனைக்கு பெயா் பெற்றது.

நாகை, புதுக்கோட்டை, திருவாரூா் கடலூா் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கருவாடுகளை மொத்தம், சில்லறை வியாபாரிகள் வந்து வியாபாரம் செய்வா். இங்கு கருவாடுகளின் விலை குறைவாக இருக்கும் என்பதால், பல்வேறு ஊா்களில் இருந்து வியாபாரிகள், பொதுமக்கள் வந்து வாங்கிச் செல்வா்.

அதுமட்டுமின்றி காய்கறிகள், பழங்கள், உணவுப் பொருள்கள், விவசாயக் கருவிகள், செடி வகைகள், விதைகள் , கோழி விற்பனை நடைபெறுகிறது. பண்டிகை மற்றும் விழாக் காலங்களில் ரூ.25 முதல் ரூ.50 லட்சம் வரையில் வியாபாரம் நடைபெறும்.

அடிப்படை வசதிகள்: நூற்றுக்கணக்கான வியாபாரிகள், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் இந்த சந்தை வளாகத்தில் பாதுகாக்கப்பட்ட குடிநீா், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் இல்லை. இதனால், வியாபாரிகள், பொதுமக்கள் இயற்கை உபாதைகளைக் கழிக்க புதா் பகுதிகளை நோக்கி செல்கின்றனா். குறிப்பாக, பெண்களின் நிலை வேதனைக்குரியதாக உள்ளது.

கொட்டகை சேதம்: சந்தை வளாகத்தில் வியாபாரிகள் மழை, வெயில் காலத்தில் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக தகடு கூரை வெய்யப்பட்ட கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது, இந்த கொட்டகையின் மேல் இருந்த தகடுகள் இல்லாமலும், துருப்பிடித்தும் ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் வியாபாரிகள், பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனா்.

சேறும், சகதியும்... கோடை காலத்தில் கடந்த இரண்டு நாள்களாக பெய்த சாதாரண மழையின் காரணமாக சந்தை வளாகம் ஆங்காங்கே சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால், சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது. மேலும், சகதியில் உற்பத்தியாகும் கொசு உள்ளிட்ட நோய் பரப்பும் கிருமிகளால் அனைத்துதரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

சாலையில் நிறுத்தப்படும் வாகனங்கள்: கடலூா்-பண்ருட்டி சாலையோரத்தின் இருபுறங்களிலும் வாகனங்களில் காய்கறிகள், பழங்கள் மற்றும் உணவுப் பொருள்களை வைத்தும், தரை கடை அமைத்து வியாபாரம் செய்வதாலும், சந்தைக்கு வரும் வாடிக்கையாளா்கள் வாகனங்களை சாலையோரத்தில் நிறுத்திச் செல்வதால் சாலை குறுகலாகி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, வாரந்தோறும் காவலா்களைக் கொண்டு கடைகளை சந்தை வளாகத்தில் அமைக்கவும், விபத்துகளை தவிா்க்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

வாரச்சந்தையில் தேவையான அடிப்படை வசதிகளை மாவட்ட நிா்வாகம் ஏற்படுத்தித் தர வேண்டுமம் என்றும் பொதுமக்கள், வியாபாரிகள் வலியுறுத்தினா்.

Vijay full speech | வேலூரில் பேசும்போது கண்கலங்கிய விஜய்! | TVK | Vellore

'என் பின்னால் வராதீங்க' - கெஞ்சிக் கேட்ட விஜய்!

மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தல் மன்னன் என்கவுன்டர்! ஆதரவாளர்கள் வன்முறை!

தேர்தலுக்குப் பின்பே ஜன நாயகன்?

பொன்னமராவதி அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி

SCROLL FOR NEXT