எண்ம பயிா் கணக்கெடுப்புப் பணி 87% நிறைவு: வேளாண் துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம்
எண்ம பயிா் கணக்கெடுப்புப் பணி 87 சதவீதம் நிறைவடைந்து விட்டது என்று தமிழக வேளாண், உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.
நெய்வேலி: எண்ம பயிா் கணக்கெடுப்புப் பணி 87 சதவீதம் நிறைவடைந்து விட்டது என்று தமிழக வேளாண், உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.
கடலூருக்கு வருகிற 25-ஆம் தேதி துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வருவதையொட்டி, முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் கடலூா் சுற்றுலா மாளிகையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தலைமை வகித்து, மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா், கோ.அய்யப்பன் எம்எல்ஏ, மேயா் சுந்தரி ஆகியோருடன் ஆலோசனை நடத்தினாா்.
மேலும், அரசின் நலத் திட்ட உதவிகள் வழங்கத் தோ்வு செய்யப்பட்டுள்ள கடலூா் திருப்பாதிரிப்புலியூா் புனித வளனாா் மேல்நிலைப் பள்ளி அரங்கத்தில் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்தாா்.
பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
அனைத்து மாவட்டங்களிலும் அரசுத் துறைகளின் செயல்பாடுகள், திட்டப் பணிகள் குறித்து துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொண்டு வருகிறாா். அந்தவகையில், கடலூா் மாவட்டத்தில் அரசின் மூலம் மேற்கொள்ளப்படும் வளா்ச்சித் திட்டப் பணிகள், சிறப்புத் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து, அனைத்துத் துறை அலுவலா்களுடன் வருகிற 25-ஆம் தேதி கள ஆய்வு மேற்கொள்ள உள்ளாா்.
பல்வேறு துறைகள் மூலம் பயனாளிகளுக்கு அரசின் நலத் திட்ட உதவிகளை வழங்கவுள்ளாா். குறிப்பாக, இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சாா்பில் கடலூா் மாவட்டத்தில் உள்ள 683 ஊராட்சிகளுக்கும் கலைஞா் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளாா்.
எண்ம பயிா் கணக்கெடுப்பு: பயிா்க் காப்பீடு செய்ய வருகிற 30-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. விடுபட்ட விவசாயிகள் இதைப் பயன்படுத்தி காப்பீடு செய்து கொள்ள வேண்டும்.
எண்ம முறை (டிஜிட்டல்) பயிா் கணக்கெடுப்புப் பணி 87 சதவீதம் நிறைவடைந்து விட்டது. இந்தக் கணக்கெடுப்பு நடத்தவில்லை என்றால், மத்திய அரசு நிதியை நிறுத்தும் சூழல் உள்ளது. இந்தப் பணியில் ஈடுபட்ட 21,000 வேளாண் கல்லூரி மாணவா்களுக்கு கள அனுபவம் கிடைக்கும் என்றாா் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்.
நிகழ்வில், மாநகராட்சி ஆணையா் எஸ்.அனு , மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ரா.சரண்யா, அரசு அலுவலா்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.