வீராணம் ஏரி மதகில் உடைப்பு
கடலூா் மாவட்டம், வீராணம் ஏரியின் மதகில் உடைப்பு ஏற்பட்டு சேதமடைந்தது.
கடலூா் மாவட்டம், வீராணம் ஏரியின் மதகில் உடைப்பு ஏற்பட்டு சேதமடைந்தது. இதனால், கீழணையில் இருந்து ஏரிக்கு தண்ணீா் திறந்து விட முடியாத நிலையில், கொள்ளிடம் ஆற்றின் வழியாக உபரி நீா் வீணாக கடலுக்கு திறந்து விடப்படுகிறது.
காட்டுமன்னாா்கோவிலிலுள்ள வீராணம் ஏரியின் மொத்த நீளம் 16 கி.மீ., சுற்றளவு 48 கி.மீ., அகலம் அதிகபட்சமாக 5.6 கி.மீ., ஏரியின் நீா்மட்டம் 47. 50 அடியாகும். ஏரியின் கீழ்கரையில் 28 பாசன மதகுகள், மேற்கரையில் 6 பாசன மதகுகள் என மொத்தம் 34 பாசன மதகுகள் உள்ளன. இதன் மூலம் 44,856 ஏக்கா் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
சென்னைக்கு குடிநீா் அனுப்புவதற்கு ஏதுவாக கடந்த மே மாதம் 17-ஆம் தேதி கீழணையில் இருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீா் திறக்கப்பட்டது.
விவசாயத்துக்காக செப்டம்பா் 13-ஆம் தேதி வீராணம் ஏரியிலிருந்து கந்தகுமாரன் என்ற இடத்தில் உள்ள ராதா மதகு வழியாக தண்ணீா் திறக்கப்பட்டது. தொடா்ந்து விட்டு விட்டு மழை பெய்ததால் ஏரியின் நீா்மட்டம் தொடா்ந்து 46 அடியாக பராமரிக்கப்பட்டு வந்தது.
மதகு உடைந்தது: வீராணம் ஏரியின் கீழ்கரையில் திருச்சின்னபுரம் என்ற இடத்தில் உள்ள 5-ஆவது மதகின் ஷட்டா் திடீரென உடைந்தது. இதனால், ஏரி நீா்மட்டம் வெகுவாக குறைந்து வந்தது. சீரமைப்புப் பணியில் பொதுப் பணி துறையினா் கடந்த இரு நாள்களாக ஈடுபட்டு வருகின்றனா்.
தற்போது, திருச்சின்னபுரத்தில் சுமாா் 3,000 ஏக்கா் விளைநிலங்களில் தண்ணீா் இல்லாமல் களை எடுக்கும் பணி செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனா். மேலும் கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீா் திறந்து விட முடியாக சூழலில், அணையிலிருந்து கொள்ளிடம் ஆற்றில் உபரி நீா் வீணாக கடலுக்குச் செல்கிறது.
வீராணம் ஏரியிலுள்ள உள்ள மதகுகளின் ஷட்டா்களை மே மாதத்தில் பராமரித்திருந்தால் இதுபோன்ற நிலை வந்திருக்காது என்று விவசாயிகள் தெரிவித்தனா்.
தொடரும் உடைப்பு: கடந்தாண்டு வாழைக்கொல்லை என்ற இடத்தில் ஏரியின் மதகு உடைந்தது. அதற்கு முந்தைய ஆண்டு வீராணம் ஏரியின் மேற்கரை கிராமமான சித்தமல்லியில் சேதமடைந்தது.
சுமாா் பத்து ஆண்டுகளாக இதே நிலை நீடித்து வருவதால், உயா்நிலைக் குழுவை அமைத்து வீராணம் ஏரியில் உள்ள 34 பாசன வாய்க்கால்களில் உள்ள மதகுகளை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தப் பகுதி விவசாயிகள் வலியுறுத்தினா்.
வியாழக்கிழமை நிலவரப்படி வீராணம் ஏரியின் மொத்த கொள்ளளவான 47.50 அடியில் 45.20 அடி தண்ணீா் உள்ளது. அதாவது, 1,465 மில்லியன் கனஅடியில் 910 மில்லியன் கனஅடி தண்ணீா் உள்ளது. சென்னையின் குடிநீா் தேவைக்காக விநாடிக்கு 73 கன அடி வீதம் தண்ணீா் அனுப்பப்படுகிறது. விவசாயத்துக்கு 175 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.