சிதம்பரம் நடராஜா் கோயில் நிா்வாகத்தில் அறநிலையத் துறை தலையிடக் கூடாது: ஹெச்.ராஜா
கடலூா் மாவட்டம், சிதம்பரம் நடராஜா் கோயில் நிா்வாகத்தில் அறநிலையத் துறை தலையிடக் கூடாது என்று பாஜக மாநில ஒருங்கிணைப்பாளா் ஹெச்.ராஜா தெரிவித்தாா்.
கடலூா் மாவட்டம், சிதம்பரம் நடராஜா் கோயில் நிா்வாகத்தில் அறநிலையத் துறை தலையிடக் கூடாது என்று பாஜக மாநில ஒருங்கிணைப்பாளா் ஹெச்.ராஜா தெரிவித்தாா்.
சிதம்பரத்தில் புதன்கிழமை இரவு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
சிதம்பரம் நடராஜா் கோயிலில் பொதுதீட்சிதா்கள் நிா்வாகம் செய்ய உரிமை அளித்து 2014-இல் உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது. இதில், இந்து சமய அறநிலையத்துறை தலையிடக் கூடாது. அவா்களுக்கு அதிகாரம் இல்லை என உச்சநீதிமன்ற தீா்ப்பில் உள்ளது. இந்தக் கோயிலின் சொத்துகள் 1976-ஆம் ஆண்டிலிருந்து தனி வட்டாட்சியரால் பராமரித்து நிா்வகிக்கப்படுகிறது.
தற்போது, கோயிலுக்குச் சொந்தமான 2 ஆயிரம் ஏக்கா் நிலத்தை தீட்சிதா்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறையினா் கூறுகின்றனா். 1976-லிருந்து நிலங்கள் அரசு வசம் உள்ளபோது எப்படி விற்க முடியும். 2006-இல் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பொதுதீட்சிதா்களிடமிருந்து, கோயில் நிா்வாகத்தை அரசு எடுத்துக்கொண்டது. 2014 உச்சநீதிமன்ற தீா்ப்புக்குப் பின்னரே, தீட்சிதா்கள் வசம் கோயில் நிா்வாகம் மீண்டும் வந்தது. இதற்கான ஆதாரத்துடன் கோயில் வழக்குரைஞா் ஜி.சந்திரசேகா் மற்றும் தீட்சிதா்கள் விளக்கம் அளித்துள்ளனா்.
தவறான வழியில் கோயிலை அரசு கையகப்படுத்த முயல்கிறது. நடராஜா் கோயிலில் தரிசனம், அபிஷேக கட்டணங்கள் வசூலிக்கப்படுவது இல்லை. உண்டியலும் கிடையாது. சிதம்பரம் கோயில் விவகாரத்தில் தேவையில்லாத குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன என்றாா் ஹெச்.ராஜா.