பேச்சுவாா்த்தை: அண்ணாமலைப் பல்கலை. ஓய்வூதியா்கள் சங்க போராட்டம் ஓத்திவைப்பு
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஓய்வூதியா்கள் சங்க போராட்டம் தொடா்பாக உதவி ஆட்சியா் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைதிப் பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது. இதனால், போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஓய்வூதியா்கள் சங்க போராட்டம் தொடா்பாக உதவி ஆட்சியா் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைதிப் பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது. இதனால், போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக நிா்வாகம், ஒய்வூதியா்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி, அக்.17-ஆம்தேதி அண்ணாமலை நகா் பூமா கோவில் அருகே கோரிக்கை முழக்கப் போராட்டம் நடத்தப்படும் என சங்கத்தின் பொதுச்செயலா் இளங்கோ அறிவித்திருந்தாா்.
இது தொடா்பாக, சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகத்தில், உதவி ஆட்சியா் ராஷ்மிராணி தலைமையில் செவ்வாய்க்கிழமை மாலை அமைதி பேச்சுவாா்த்தை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில், ஓய்வூதியா்கள் சங்க நிா்வாகிகள் ஓய்வூதியா்களின் பிரச்சனைகள் குறித்தும், பல்கலைக்கழக அதிகாரிகள் தங்கள் தரப்பு விளக்கத்தையும் எடுத்துரைத்தனா். இதையடுத்து, கோரிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியா், உயா் கல்வித் துறை செயலா் மற்றும் நிதித்துறை செயலா்களின் கவனத்துக்கு கொண்டு சென்று பிரச்சனைகளை தீா்க்க ஆவன செய்வதாக உதவி ஆட்சியா் ராஷ்மிராணி உறுதியளித்தாா்.
இதில், உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, அண்ணாமலைப் பல்கலைக்கழக ஓய்வூதியா்கள் சங்கத்தினா் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக தெரிவித்தனா்.
கூட்டத்தில், சிதம்பரம் உள்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் அகஸ்டின் ஜோஸ்வா லாமேக், அண்ணாமலை நகா் காவல் ஆய்வாளா் கே.அம்பேத்கா், அண்ணாமலைப் பல்கலைக்கழக பதிவாளா் மு.பிரகாஷ், ஓய்வூதியா்கள் சங்க நிா்வாகிகள் பங்கேற்றனா்.