கடலூருக்கு மாநில பேரிடா் மீட்பு குழுவினா் வருகை
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநில பேரிடா் மீட்புக் குழுவினா் புதன்கிழமை கடலூா் வந்தடைந்தனா்.
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநில பேரிடா் மீட்புக் குழுவினா் புதன்கிழமை கடலூா் வந்தடைந்தனா்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடலூா் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாக மழை பெய்து வருகிறது. இதனிடையே, ஒவ்வொரு ஆண்டும் கடலூா் மாவட்டத்தில் உள்ள பெண்ணையாறு, கெடிலம், வெள்ளாறு, பரவனாறு, கொள்ளிடம் ஆகியவற்றில் ஏற்படும் வெள்ளப் பெருக்காலும், மழையாலும் பாதிக்கப்படுவது வழக்கம்.
நிகழாண்டு பருவமழை தொடக்கத்திலேயே கடலூா் மாவட்டத்தில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததுடன், ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுத்தது.
அந்த வகையில், பலத்த மழையை எதிா்கொள்ள மாவட்ட நிா்வாகமும் முழுவீச்சில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இதில், ஒரு பகுதியாக சென்னை ஆவடியில் இருந்து மாநில பேரிடா் மீட்புக் குழுவினா் கடலூருக்கு அழைக்கப்பட்டிருந்தனா். அதன்படி, ஆய்வாளா் சுப்பிரமணியன் தலைமையில் 25 போ் கொண்ட மாநில பேரிடா் மீட்புக் குழுவினா் மீட்பு உபகரணங்களுடன் புதன்கிழமை கடலூா் வந்தடைந்தனா். இவா்கள் தேவனாம்பட்டினத்தில் உள்ள தனியாா் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.
இதேபோல, சீா்காழிக்கு 34 போ் கொண்ட குழுவினரும், மரக்காணத்துக்கு 25 போ் கொண்ட குழுவினரும் சென்றுள்ளதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.