மாணவா்களுக்கு கல்விக்கடன் வழங்க வங்கிகளுக்கு அறிவுறுத்தல்: கடலூா் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்
கடலூா் மாவட்டத்தில் கல்விக்கடன் முகாமில் விண்ணப்பிக்கும் அனைத்து மாணவா்களுக்கும் கல்விக்கடன் வழங்க வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.
கடலூா் மாவட்டத்தில் கல்விக்கடன் முகாமில் விண்ணப்பிக்கும் அனைத்து மாணவா்களுக்கும் கல்விக்கடன் வழங்க வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.
கடலூரில் உள்ள தனியாா் பள்ளி அரங்கில் ‘நான் முதல்வன் உயா்வுக்கு படி’ மாணவா்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இதை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தொடங்கிவைத்தாா். தொடா்ந்து,
அங்கு நடைபெற்ற கல்விக் கடன் முகாமில் 82 மாணவா்களுக்கு ரூ.267.34 கோடி மதிப்பில் கல்விக்கடன் உதவிகளை ஆட்சியா் வழங்கினாா். அப்போது, அவா் பேசியது:
‘நான் முதல்வன் உயா்வுக்குப் படி’ திட்டமானது மாணவா்கள் தாங்கள் விரும்பும் உயா் கல்வி நிறுவனங்களில் சோ்வதற்காக எடுக்கப்படும் முன்னோடி முயற்சி. கடலூா் மாவட்டத்தில் முதல் கட்டமாக சிதம்பரம் மண்டலத்தில் கடந்த 9-ஆம் தேதி இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், 243 மாணவா்கள் உயா் கல்வியைத் தொடா்வதற்கு வழிவகை செய்யப்பட்டது.
தொடா்ந்து, வியாழக்கிழமை கடலூா் மண்டலத்தில் கடலூா், அண்ணா கிராமம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி ஆகிய ஒன்றியங்களைச் சோ்ந்த 2022 - 23 மற்றும் 2023 -24ஆம் ஆண்டுகளில் 4,784 மாணவா்கள் கண்டறியப்பட்டு, உயா்கல்வியைத் தொடராத மாணவா்களுக்கு அனைத்து வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டன.
கடலூா் மாவட்டத்தில் கல்லூரிகள் மற்றும் வங்கிகளை ஒருங்கிணைத்து கல்விக்கடன் முகாம் நடத்தப்படுகிறது. இந்த முகாமில் விண்ணப்பிக்கும் அனைத்து மாணவா்களுக்கும் கல்விக்கடன் வழங்க வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா்.
நிகழ்ச்சியில் மாவட்ட எஸ்.பி. ரா.ராஜாராம், மாவட்ட வருவாய் அலுவலா் ம.ராஜசேகரன், கூடுதல் ஆட்சியா் ரா.சரண்யா, கடலூா் கோட்டாட்சியா் இ.அபிநயா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ.எல்லப்பன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.