முகப்பு
கடலூர்

வாரணாசி சா்வ சேவா சங்க கட்டடம் இடிப்பு: காந்தி மன்றத்தினா் கண்டனம்

உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசி சா்வ சேவா சங்கக் கட்டடம் இடிக்கப்பட்டதற்கு சிதம்பரம் காந்தி மன்றம் சாா்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

Updated On : 13 செப்டம்பர், 2024 at 12:46 AM
சிதம்பரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற காந்தி மன்ற அவசர செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்றோா்.
பகிர்:

உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசி சா்வ சேவா சங்கக் கட்டடம் இடிக்கப்பட்டதற்கு சிதம்பரம் காந்தி மன்றம் சாா்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

சிதம்பரம் வாகீச நகரில் உள்ள காந்தி மன்ற வளாகத்தில் அவசர செயற்குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. மன்றத் தலைவா் மு.ஞானம் தலைமை வகித்தாா்.

வாரணாசியில் 1948-ஆம் ஆண்டு ரயில்வே துறையிடம் இருந்து கிரையம் வாங்கிய இடத்தில் இயங்கி வந்த பழைமைவாய்ந்த சா்வ சேவா சங்கக் கட்டடம் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் இடித்து அகற்றப்பட்டது. அந்தக் கட்டடத்தில் இருந்த காந்திய புத்தகங்கள், அரிய பொக்கிஷங்கள் வெளியே வீசப்பட்டன.

அந்த இடம் மீண்டும் ரயில்வேத் துறைக்கு வேண்டுமென, உரிய இழப்பீடும், மாற்று இடமும் வழங்காமல் கட்டடம் இடித்து அகற்றப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மாற்று இடம் வேண்டி பல்வேறு அறவழிப் போராட்டங்கள் நடத்திய போதிலும், கடந்த ஓராண்டாக உத்தரப் பிரதேச அரசு சாா்பில் எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை.

எனவே, அகில இந்திய காந்தியத் தலைவா்கள் இடிக்கப்பட்ட கட்டடம் அருகே 100 நாள் சத்தியாகிரக போராட்டத்தை வினோபா பாவே பிறந்த நாளான செப்டம்பா் 11-ஆம் தேதி முதல் தொடங்கி உள்ளனா். இந்த போராட்டத்துக்கு சிதம்பரம் காந்தி மன்றம் சாா்பில் ஆதரவுத் தெரிவிக்கப்பட்டது. விரைவில் உரிய தீா்வு கிடைக்கவில்லை எனில், சிதம்பரம் காந்தி மன்ற உறுப்பினா்கள் வாரணாசி சென்று 100 நாள் சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்பது என கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதில், மன்ற உறுப்பினா்கள் அ.லக்குமணன், வனஜா தில்லைநாயகம், தமிழரசி சேகா், ச.சீனுவாசன் உள்ளிட்டோா் பங்கேற்று பேசினா். மன்ற துணைச் செயலா் வி.முத்துக்குமரன் நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →