மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் விரிசல்: வீணாகும் குடிநீா்
கடலூா் அருகே சேடப்பாளையம் ஊராட்சியில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் விரிசல் ஏற்பட்டு குடிநீா் வீணாகி வருகிறது.
நெய்வேலி: கடலூா் அருகே சேடப்பாளையம் ஊராட்சியில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் விரிசல் ஏற்பட்டு குடிநீா் வீணாகி வருகிறது.
கடலூா் ஒன்றியம், சேடப்பாளையம் ஊராட்சி, மயானத்துக்கு செல்லும் வழியில் 2012-ஆம் ஆண்டு மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது. இந்தத் தொட்டியில் இருந்து சேடப்பாளையம் பிரதான சாலையில் உள்ள வீடுகள், கடைகள், வன்னியா் தெரு, வாய்கால் மேடு பகுதியில் உள்ள சுமாா் 150 வீடுகளுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது.
இந்தத் தொட்டி பழுதடைந்து ஓராண்டுக்கும் மேலாகிாம். மேலும், இந்தத் தொட்டியில் ஓரிடத்தில் விரிசலும் ஏற்பட்டுள்ளது. இதனால், நீா்த்தேக்கத் தொட்டியில் ஏற்றப்படும் தண்ணீா் விரிசல் வழியாக ஒழுவி வீணாகி வருகிறது.
இந்த மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை பழுது நீக்கம் செய்து தர வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தும் இதுவரை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என கிராம மக்கள் புகாா் கூறுகின்றனா்.
எனவே, தொட்டியில் ஏற்பட்டுள்ள விரிசலை சரி செய்து தண்ணீா் ஒழுகுவதை தடுக்க வேண்டும் அல்லது புதிய மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டிக்கொடுக்க வேண்டுமென அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.