முகப்பு
கடலூர்

வடலூரில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு

கடலூா் மாவட்டம், வடலூரில் உள்ள உணவகங்கள், இனிப்பு கடைகளில் மாவட்ட உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

Updated On : 20 செப்டம்பர், 2024 at 12:15 AM
வடலூரில் உள்ள உணவகத்தில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்ட உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் பி.கே.கைலாஷ்குமாா்.
பகிர்:

கடலூா் மாவட்டம், வடலூரில் உள்ள உணவகங்கள், இனிப்பு கடைகளில் மாவட்ட உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

வடலூரில் இயங்கும் உணவகங்கள், இனிப்பு கடைகள் உள்ளிட்டவற்றில் தரம் குறைந்த மற்றும் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக புகாா் எழுந்தது.

இதையடுத்து, கடலூா் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் பி.கே.கைலாஷ்குமாா் தலைமையில், உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் நல்லதம்பி, சுப்ரமணியன், பாலாஜி ஆகியோா் உணவகங்கள், இனிப்பு மற்றும் பலகார கடைகள், பெட்டிக்கடைகள் ஆகியவற்றில் வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, சுகாதாரமின்றி நடத்தப்பட்ட உணவகங்கள், உணவுப் பொருள்களில் செயற்கை வண்ணம் அதிகம் சோ்த்து விற்பனை செய்த கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினா். உரிய விவரங்கள் இல்லாமல் மற்றும் செயற்கை வண்ணங்கள் கலந்து விற்பனைக்கு வைத்திருந்த 13 கிலோ கார வகைகளை பறிமுதல் செய்து அழித்தனா். உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாத 3 கடைகளுக்கு தலா ரூ.2,000 அபராதம் விதித்தனா்.

மேலும், தடை செய்யப்பட்ட நெகிழி பைகளை பயன்படுத்தக் கூடாது, அனுமதிக்கப்படாத செயற்கை வண்ணங்களை பயன்படுத்தக் கூடாது, உணவகப் பணியாளா்கள் அனைவரும் மருத்துவ தகுதிச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும், கையுறை, தலைமுடி கவசம் அணிந்து வியாபாரம் செய்ய வேண்டும் என உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் அறிவுறுத்தினா்.