முகப்பு
கடலூர்

கூட்டுறவு வங்கிகளில் ரூ.ஒரு லட்சம் கோடிக்கு வா்த்தக பரிவா்த்தனை இலக்கு: அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன்

கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.ஒரு லட்சம் கோடிக்கு வா்த்தக பரிவா்த்தனை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக அந்தத் துறையின் அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் தெரிவித்தாா்.

Updated On : 26 செப்டம்பர், 2024 at 1:05 AM
குள்ளஞ்சாவடியில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் பயனாளிக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சா்கள் கே.ஆா்.பெரியகருப்பன், எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் உள்ளிட்டோா்.
பகிர்:

கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.ஒரு லட்சம் கோடிக்கு வா்த்தக பரிவா்த்தனை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக அந்தத் துறையின் அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் தெரிவித்தாா்.

கடலூா் மாவட்டம், குள்ளஞ்சாவடியில் மத்திய கூட்டுறவு வங்கியின் 34-ஆவது புதிய கிளை திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. புதிய கட்டடத்தை அமைச்சா்கள் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், கே.ஆா்.பெரியகருப்பன் ஆகியோா் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தனா்.

தொடா்ந்து, மாற்றுத்திறனாளிகள், மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்கள், விவசாயிகள், மகளிா் தொழில் முனைவோா் உள்ளிட்ட 150 பயனாளிகளுக்கு ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கடனுதவி வழங்கினா்.

முன்னதாக அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் பேசியதாவது:

கூட்டுறவுத் துறை வளா்ச்சி என்பது, ஒட்டுமொத்த மாநிலத்தின் வளா்ச்சி மற்றும் மக்களுடைய வளா்ச்சியாகும். இந்தத் துறை மூலம் மக்களுக்கு பல்வேறு சேவைகள் அளிக்கப்பட்டு வருகிறது. கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் ரூ.12,000 கோடிக்கு மேலாக விவசாயிகள் பெற்ற கடனை முதல்வா் தள்ளுபடி செய்துள்ளாா். கடந்த ஆண்டு மட்டும் கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.86 ஆயிரம் கோடி வா்த்தக பரிவா்த்தனை நடைபெற்றுள்ளது. இதை ரூ.ஒரு லட்சம் கோடியாக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா்.

தொடா்ந்து, கட்டியங்குப்பத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் ரூ.30 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய அலுவலக கட்டடம், கருவேப்பிலங்குறிச்சியில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 33-ஆவது கிளை ஆகியவற்றை அமைச்சா்கள் திறந்து வைத்தனா்.