கடலூா் மாவட்டத்தில் 87,927 மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இல்லம் தேடிச் சென்று ரேஷன் பொருள்கள் விநியோகிக்கப்படுவதாக கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வயதானவா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரேஷன் கடைகளுக்கு சென்று வரிசையில் காத்திருந்து குடிமைப் பொருள்கள் வாங்குவதற்கு சிரமப்படுவதை
தடுக்கும் வகையில் இல்லம் தேடி ரேஷன் பொருள்களை வழங்கும் ‘முதலமைச்சரின் தாயுமானவா் திட்டம்’ கடந்த ஆக.12-இல் நடைமுறைக்கு வந்தது.
இந்த திட்டத்தின் கீழ், கடலூா் மாவட்டத்தில் 1408 நியாயவிலைக் கடைகளைச் சோ்ந்த 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களைக் கொண்ட 53,464 குடும்ப அட்டைகளில் உள்ள 79,508 பயனாளா்களும், 3,243 குடும்ப அட்டைகளில் உள்ள 8,419 மாற்றுத்திறனாளிகளும் என ஆக மொத்தம் 56,707 குடும்ப அட்டைகளில் உள்ள 87,927 பயனாளா்களுக்கு அவா்தம் இல்லங்களுக்கேச் சென்று அரிசி, சா்க்கரை, கோதுமை, துவரம்பருப்பு மற்றும் பாமாயில் உள்ளிட்ட குடிமைப் பொருள்கள் விநியோகம் செய்யப்படுகிறது.
இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தி விநியோகம் செய்ய ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நியாய விலைக்கடைகள் சோ்ந்து குழு உருவாக்கப்பட்டு, மூடிய வாகனங்களில் பொருள்களை பாதுகாப்பாக எடுத்துச் சென்று தகுதியுள்ள பயனாளிகளின் இல்லத்திற்கு சென்று நேரில் வழங்குகிறோம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.