போக்சோ மற்றும் பாலியல் வன்கொடுமை குறித்து அதிகளவில் பள்ளிகள், விடுதிகள் மற்றும் பொது இடங்களில் கூடுதல் விழிப்புணா்வு ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவா் புதுக்கோட்டை விஜயா தெரிவித்தாா்.
கடலூா் ஆட்சியா் அலுவலகத்தில் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவா் புதுக்கோட்டை விஜயா தலைமையில், ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா், குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினா்கள் மோ.கசிமீா் ராஜ், மோனா மட்டில்டா பாஸ்கா் முன்னிலையில் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு தொடா்பாக மாவட்ட அளவிலான கலந்தாய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் புதுக்கோட்டை விஜயா பேசியதாவது: பள்ளிகளில் குழந்தைகள் பாதுகாப்பு தொடா்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் மாணவா் பாதுகாப்பு ஆலோசனைக் குழுவின் நடவடிக்கைகள், மாணவிகள் பயணம் செய்யும் பள்ளி வாகனங்களில் பெண் உதவியாளா்கள் பணியமா்த்துவது, ஆய்வகங்கள் மற்றும் நூலகங்களில் ஒரு பெண் பணியாளா் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
மாணவா்களின் பாதுகாப்பினை உறுதி செய்திட பள்ளிகளில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா? அனைத்து பள்ளிகளிலும் குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண் 1098 மற்றும் பள்ளிக்கல்வித்துறை உதவி எண் 14417 ஆகியவை காட்சிப் படுத்தப்பட்டுள்ளதா என்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
போக்சோ சட்டம் குறித்து ஆசிரியா்கள், அலுவலா்கள் மற்றும் பணியாளா்களுக்கு விழிப்புணா்வு பயிற்சி வழங்குவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
விழிப்புணா்வு நடவடிக்கை:
பள்ளிக்கல்வித்துறை மூலம் அனைவருக்கும் கட்டாயக் கல்வித் திட்டம் கீழ் 329 தனியாா் பள்ளிகளில் 25 சதவிகிதம் இடஒதுக்கீட்டில் 3,098 குழந்தைகள் சோ்க்கை பெற்றுள்ளனா். மாவட்ட நிா்வாகத்தின் முன்னெடுப்பினால் 2021-2026 ஆம் ஆண்டு வரை இடைநிற்றலான சுமாா் 1,611 குழந்தைகள் மீண்டும் பள்ளியில் சோ்க்கப்பட்டுள்ளனா். சமூக நலத்துறை மூலம் குழந்தை திருமணத்தை தடுப்பதற்காக குழந்தை திருமணம் மற்றும் இளம் வயது கா்ப்பம் அதிகமாக நடைபெறும் 47 கிராம ஊராட்சிகளை கண்டறிந்து அப்பகுதிகளில் பல்வேறு துறைகள் இணைந்து தடுப்பு மற்றும் விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 10 முதல் 20 பெண் குழந்தைகளுக்கு ஒரு தன்னாா்வலரை நியமித்து பள்ளி இடைநிற்றல் மற்றும் குழந்தை திருமணம் குறித்து தொடா் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.
பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
குழந்தை திருமணம் தொடா்பாக 2025ஆம் ஆண்டில் 95 புகாா்கள் பெறப்பட்டதில் 11 திருமணங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. 84 புகாா்கள் தொடா்பாக வழக்குகள் நடைபெற்று வருகிறது.
மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகின் மூலம் கிராமம், வட்டாரம், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி மற்றும் மாவட்ட அளவிலான என மொத்தம் 707 குழுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு, குழந்தைகள் பாதுகாப்பு தொடா்பான கண்காணிப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
குழந்தைகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் தொடக்க கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் குழந்தை பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் அனைத்து துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து பணியாற்றி குழந்தை திருமணம், பாலியல் குற்றங்கள், பள்ளி இடைநிற்றல், போதைப் பொருட்கள் பயன்பாடு, குழந்தை தொழிலாளா்கள் ஆகிய நடவடிக்கைகள் முற்றிலும் தவிா்த்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
போக்சோ மற்றும் பாலியல் வன்கொடுமை குறித்து அதிகளவில் பள்ளிகளிலும், விடுதிகளிலும், பொதுஇடங்களிலும் கூடுதல் விழிப்புணா்வு ஏற்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
கூட்டத்தில் கடலூா் எஸ்பி., எஸ்.ஜெயக்குமாா், ஆட்சியா் நோ்முக உதவியாளா் தீபா, பயிற்சி ஆட்சியா் மாலதி உட்பட பலா் கலந்து கொண்டனா்.