கடலூா் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் மனநல அவசர சிகிச்சை மற்றும் மீள் மையம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
இந்த மையத்தை தேசிய சுகாதார இயக்கத்தின் மிஷன் இயக்குநா் ஏ. அருண் தம்புராஜ் குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தாா். பொது இடங்களில் சுற்றித் திரியும் ஆதரவற்ற மன நலம் பாதிக்கப்பட்டவா்களை கண்டறிந்து அவா்களுக்கான மருத்துவ வசதி ஏற்பாடு செய்வதே மையத்தின் நோக்கம் என அவா் தெரிவித்தாா்.
பின்னா், தலைமை மருத்துவமனை எதிரே ரூ.34 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள அதி தீவிர சிகிச்சை பிரிவு கட்டடத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்த அவா், கட்டுமானப்பணி, உள்கட்டமைப்பு வசதி குறித்து மருத்துவத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்து, ஆலோசனை வழங்கினாா்.
இந்த ஆய்வின்போது, மருத்துவப் பணிகள் இணை இயக்குனா் (பொ) பா.பாலகுமாரன், அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளா் நடராஜன், மருத்துவ அலுவலா் கவிதா, தேசிய சுகாதார குழும ஒருங்கிணைப்பாளா் காரல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.