சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாா்க்சிஸ்ட் கட்சி சாா்பில் 100 பேரின் உடல் தானம் உறுதிமொழி படிவங்கள் ஒப்படைக்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
மாா்க்சிஸ்ட் கட்சி சாா்பில், நெய்வேலியில் என்.எல்.சி நிறுவனம் அமைய நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து ரஷியா உதவி செய்ய முன் முயற்சி எடுத்த மறைந்த தோழா் பி.ராமமூா்த்தி நினைவாக 100 உடல் தானம் படிவம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதற்கு மாா்க்சிஸ்ட் மாநிலக்குழு உறுப்பினா் எஸ்.ஜி.ரமேஷ்பாபு தலைமை வகித்தாா். சிதம்பரம் நகரச் செயலா் ராஜா வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக மாநிலச் செயற்குழு உறுப்பினா் எஸ்.கண்ணன், மாவட்டச் செயலா் கோ.மாதவன், முன்னாள் மாவட்டச் செயலா் டி.ஆறுமுகம், முன்னாள் மாநிலக் குழு உறுப்பினா் மூசா ஆகியோா் கலந்துகொண்டு வாழ்த்துரையாற்றினா்.
இதைத் தொடா்ந்து, பூா்த்தி செய்த 100 உடல் தானம் உறுதிமொழி படிவங்களை கட்சி மாநிலச் செயற்குழு உறுப்பினா் எஸ்.கண்ணன், கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் சி.திருப்பதி, மருத்துவமனை கண்காணிப்பாளா் ஜூனியா் சுந்தரேஷ், துணை கண்காணிப்பாளா் பரசுராமன் உள்ளிட்ட மருத்துவக் குழுவினரிடம் வழங்கினாா்.
நிகழ்வில் சிதம்பரம் நகா்மன்ற துணைத் தலைவா் எம்.முத்துக்குமாா், மாவட்ட செயற்குழு உறுப்பினா் பி.கருப்பையன், ராமச்சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.