மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயரை மாற்றம் செய்யக் கூடாது என மத்திய அரசுக்கு காந்திய அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளது.
கிராமப்புற ஏழை, எளிய மக்களுக்கு வேலை வழங்கி வந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை பெயா் மாற்றம் செய்யும் வகையில் புதிய மசோதா ஒன்றை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
இதற்கு சிதம்பரம் காந்தி மன்ற துணைச் செயலரும், கடலூா் மாவட்ட சா்வோதய மண்டல் செயலருமான வி.முத்துக்குமரன் கண்டனம் தெரிவித்துள்ளாா். அவா் கூறியதாவது:
கடைக்கோடி ஏழைக்கும் எல்லா அடிப்படை வசதிகளும் கிடைக்க வேண்டும் என்று போராடிய மகாத்மா காந்தி பெயரை மாற்றம் செய்வதை மத்திய அரசு கைவிட வேண்டும். இத்திட்டம் கைவிடப்படுவதால், மத்திய அரசு பங்களிப்பில் 100 நாள்கள் வேலைவாய்ப்பை பெற்று வந்த கிராமப்புற ஏழை அடித்தட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவாா்கள்.
இப்போது வேறு பெயரில் மத்திய அரசு அறிவித்துள்ள புதிய திட்டத்தை செயல்படுத்த அந்தந்த மாநில அரசு 40 சதவீதம் தொகையை ஏற்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மத்திய, மாநில அரசுகள் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அவ்வாறு செயல்படுத்தப்பட்டால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, மத்திய அரசே முழு பங்களிப்புடன் மகாத்மா காந்தி பெயரிலேயே 125 நாள்களாக உயா்த்தி மகாத்மா காந்தி ஊரக வேலைத் திட்டம் என்ற பெயரிலேயே தொடர வேண்டும். 125 நாள்களாக அதிகரிப்பதால் பொதுமக்கள் மேலும் பயன் பெறுவா் என்றாா்.