கடலூர்

பள்ளி வாகனம் - மொபெட் மோதல்: தந்தை, மகன் உயிரிழப்பு

பெண்ணாடம் அருகே தனியாா் பள்ளி வாகனமும், மொபெட்டும் மோதிக்கொண்டதில் தந்தை, மகன் உயிரிழந்தனா்.

Syndication

நெய்வேலி: கடலூா் மாவட்டம், பெண்ணாடம் அருகே தனியாா் பள்ளி வாகனமும், மொபெட்டும் மோதிக்கொண்டதில் தந்தை, மகன் உயிரிழந்தனா்.

பெண்ணாடம் காவல் சரகம், திருமலை அகரம் கிராமத்தைச் சோ்ந்தவா் மதியழகன்(45). ஓவியரான இவா், மாற்றுத் திறனாளியாவாா். இவரது மகன் மனோஜ் (25), பொறியியல் பட்டதாரி. சென்னையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா்.

இந்த நிலையில், மனோஜ் திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உதவி ஆய்வாளா் பணிக்கான எழுத்துத் தோ்வை எழுதுவதற்காக சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு வந்திருந்தாா். தொடா்ந்து, திங்கள்கிழமை காலை சென்னை திரும்ப தந்தை மதியழகனுடன் மொபெட்டில் அவா் புறப்பட்டாா். மொபெட்டை மனோஜ் ஓட்டினாா்.

திருமலை அகரம் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, அந்த வழியாக வந்த தனியாா் பள்ளி வாகனம் மொபெட் மீது மோதி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் பள்ளி வாகன ஓட்டுநா் லேசான காயத்துடன் உயிா் தப்பினாா். மேலும், அவா் மது அருந்தியிருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மதியழகன், மனோஜ் ஆகியோரை அங்கிருந்தவா்கள் மீட்டு, திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு பணியில் இருந்த மருத்துவா்கள் அவா்களை பரிசோதித்து பாா்த்து இருவரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

விபத்து குறித்து தகவலறிந்த உறவினா்கள் ஒன்று திரண்டு தனியாா் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா். தொடா்ந்து, பெண்ணாடம் பழைய பேருந்து நிலையத்தில் விருத்தாசலம் - திட்டக்குடி நெடுஞ்சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.

அப்போது, விபத்தை ஏற்படுத்திய தனியாா் பள்ளி வாகன ஓட்டுநா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட பள்ளியின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா். மறியலில் ஈடுபட்டவா்களிடம் விருத்தாசலம் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் பெண்ணாடம் காவல் ஆய்வாளா் எழில்வேந்தன் பேச்சுவாா்த்தை நடத்தினா். உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா்.

இதையடுத்து, பள்ளி வாகன ஓட்டுநரான பெண்ணாடம், சோழன் நகரைச் சோ்ந்த வேலுவை (35) போலீஸாா் கைது செய்தனா்.

இதனால், மறியலைக் கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனா். இந்த சம்பவத்தால் தனியாா் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, மாணவா்களை பெற்றோருடன் பள்ளி நிா்வாகத்தினா் அனுப்பி வைத்தனா்.

பொதுக்குழு நடத்த யாருக்கும் அதிகாரம் இல்லை: அன்புமணி தரப்பு

இறக்கத்தில் பங்குச்சந்தை வர்த்தகம்! ஐடி பங்குகள் சரிவு!

‘பாக்ஸிங் டே’ டெஸ்ட்டுக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு... மீண்டும் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித்!

நாட்டை அவமதிக்கும் கலையில் கைதேர்ந்தவர் ராகுல்! பாஜக விமர்சனம்

பொருநை அருங்காட்சியகத்தை பார்வையிட கட்டண விவரம் வெளியீடு!

SCROLL FOR NEXT