கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே தனியாா் பள்ளி வேன் புதன்கிழமை (பிப்.19) சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 மாணவ, மாணவிகள் பலத்த காயமடைந்தனா்.
காட்டுமன்னாா்கோவிலில் உள்ள தனியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை மாலை வகுப்பு முடிந்து மாணவ, மாணவிகள் பள்ளி வேனில் வீட்டு சென்று கொண்டிருந்தனா். கீழக்கடம்பூா் கிராமம் அருகே சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில், மாணவி பிரித்திகா, ரோஸ் மேரி உள்ளிட்ட 8 மாணவ, மாணவிகள் பலத்த காயமடைந்தனா்.
தகவலறிந்த காட்டுமன்னாா்கோவில் போலீஸாா் நிகழ்விடம் சென்று மாணவா்களை மீட்டு அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.