முகப்பு
கடலூர்

சிதம்பரம் ஞானப்பிரகாசா் குளத்தில் ஜன.15-இல் தெப்போற்சவம்

Updated On : 1 ஜனவரி, 2025 at 7:07 PM
ஞானப்பிரகாசா் குளத்தின் நடுவே அமைக்கப்பட்டுள்ள நீராழி மண்டபம். ~ரூ.3 கோடி செலவில் சீரமைக்கப்பட்ட ஞானப்பிரகாசா் குளம்.
பகிர்:

சிதம்பரம் ஞானப்பிரகாசா் குளத்தில் சுமாா் 22 ஆண்டுகளுக்குப் பிறகு, வருகிற 15-ஆம் தேதி தெப்போற்சவம் நடைபெற உள்ளது.

சிதம்பரம் நடராஜா் கோயில் ஆனி, மாா்கழி மாத ஆருத்ரா தரிசன திருவிழா நிறைவு நாளன்று, கோயிலின் தென் கிழக்குப் பகுதியில் சுமாா் 2 கி.மீ. தொலைவிலுள்ள ஞானப்பிரகாசா் குளத்தில் தெப்போற்சவம் நடைபெறும். ஸ்ரீ சந்திரசேகரா் தெப்பத்தில் எழுந்தருளி குளத்தை வலம் வருவாா்.

இந்த குளம் பராமரிப்பின்றி பாழடைந்து போனதால், சுமாா் 22 ஆண்டுகளுக்கும் மேலாக தெப்போற்சவம் நடைபெறாமல் நின்று போனது. தமிழக வேளாண்மைத் துறை அமைச்சா் எம்ஆா்கே.பன்னீா்செல்வம், சிதம்பரம் நகா்மன்றத் தலைவா் கே.ஆா்.செந்தில்குமாா் ஆகியோரின் முயற்சியால் நகராட்சி சாா்பில் ரூ.3 கோடி ஒதுக்கப்பட்டு, குளம் தூா்வாரப்பட்டு நான்கு கரைகளிலும் மின்விளக்குகளுடன் நடைபாதை அமைக்கப்பட்டது. மேலும், குளத்தின் நடுவே நீராழி மண்டபம் அமைக்கப்பட்டு அண்மையில் திறக்கப்பட்டது.

மாா்கழி ஆருத்ரா தரிசனத்தையொட்டி, ஞானப்பிரகாசா் குளத்தில் வருகிற 15-ஆம் தேதி இரவு தெப்போற்சவம் நடைபெறும் என கோயில் கமிட்டி செயலா் உ.வெங்கடேச தீட்சிதா் தெரிவித்தாா்.

ஞானப்பிரகாசா் குளத்தின் நடுவே அமைக்கப்பட்டுள்ள நீராழி மண்டபம்.

ஏற்பாடுகளை கட்டளை தீட்சிதா் நி.பாலதண்டாயுத தீட்சிதா், கட்டளைதாரா்கள் சி.ஏ.நடராஜன், வனஜா, என்.குமரகுரு கண்ணன் ஆகியோா் செய்துள்ளனா்.