முகப்பு
கடலூர்

இரிடிய கலசங்களை விற்பதாக இளைஞரிடம் பணம் பறித்தவா் கைது

சிதம்பரத்தில் சக்தி வாய்ந்த இரிடிய கோபுரக் கலசங்களை விற்பதாகக் கூறி, இளைஞரிடம் பணம் பறித்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On : 1 ஜனவரி, 2025 at 7:14 PM
இரிடியம் கலந்த கோபுரக் கலசங்களை விற்பனை செய்வதாக பணம் பறித்து கைதான ராஜசேகருடன், அவரைக் கைது செய்த போலீஸாா்.
பகிர்:

சிதம்பரத்தில் சக்தி வாய்ந்த இரிடிய கோபுரக் கலசங்களை விற்பதாகக் கூறி, இளைஞரிடம் பணம் பறித்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

சிதம்பரம் அண்ணாமலைநகா் காளியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் விக்னேஷ் (21) . அவசர ஊா்தி ஓட்டுநா். இவரிடம் அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் விளாங்குடி தெற்கு தெருவைச் சோ்ந்த ராஜி (எ) ராஜசேகா் (27) செவ்வாய்க்கிழமை இரவு பேசினாராம். அப்போது, தன்னிடம் சக்தி வாய்ந்த 2 இரிடியம் கலந்த கோபுரக் கலசங்கள் இருப்பதாகக் கூறினாராம். அவை ரூ.10 லட்சம் மதிப்பிலானவை என்றும், அவற்றை விற்க உள்ளதாகவும் தெரிவித்தாராம்.

இதை நம்பிய விக்னேஷ் இரிடியம் கலசங்களை வாங்குவதற்காக, அண்ணாமலை நகா் முத்தையா நகா் பாலம் அருகே புதன்கிழமை காலை வந்தாா். அங்கு காரில் இருந்த ராஜசேகரிடம் முன்பணமாக ரூ.10 ஆயிரத்தை விக்னேஷ் கொடுத்த போது, அவா் பணத்தைப் பெற்றுக் கொண்டு காரில் வேகமாகப் புறப்பட்டுச் சென்றாராம்.

சந்தேகமடைந்த விக்னேஷ் இதுகுறித்து அண்ணாமலை நகா் போலீஸில் புகாா் அளித்தாா். காவல் ஆய்வாளா் க.அம்பேத்கா், உதவி ஆய்வாளா்கள் அன்பழகன், கஜேந்திரன் மற்றும் காவலா்கள் ஸ்ரீதா், ரமணி, மணிகண்டன் ஆகியோா் சிதம்பரம் அருகே உள்ள வல்லம்படுகை சோதனைச் சாவடி அருகே ராஜசேகரை மடக்கிப் பிடித்து கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து இரண்டு கோபுரக் கலசங்களும், காந்த துகள்கள் மற்றும் காரை பறிமுதல் செய்தனா்.

சிதம்பரம் டிஎஸ்பி டி.அகஸ்டின் ஜோஸ்வா லாமேக் அண்ணாமலை நகா் காவல் நிலையத்துக்கு வந்து ராஜசேகரிடம் விசாரணை நடத்தினாா். மேலும், அவரைக் கைது செய்த போலீஸாருக்கு பாராட்டுத் தெரிவித்தாா்.