முகப்பு
கடலூர்

கடலூா் மாவட்டத்தில் அரசு விதிகளின்படி திட்ட கட்டுமானப் பணிகள்: கண்காணிப்பு அலுவலா் அறிவுறுத்தல்

கண்காணிப்பு அலுவலா் அறிவுறுத்தல்

Updated On : 22 ஜனவரி, 2025 at 7:55 PM
கடலூா், தேவனாம்பட்டினம் வெள்ளிக்கடற்கரையில் நடைபெற்று வரும் மேம்பாட்டுப் பணிகளை ஆய்வு செய்த மாவட்ட காண்காணிப்பு அலுவலா் த.மோகன், ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.
பகிர்:

கடலூா் மாவட்டத்தில் திட்ட கட்டுமானப் பணிகளை அரசு விதிகளின்படி மேற்கொள்ளவும், அவற்றை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென துறை அலுவலா்களுக்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலா் த.மோகன் அறிவுறுத்தினாா்.

கடலூா், நெல்லிக்குப்பம், பண்ருட்டி மற்றும் காடாம்புலியூா் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் திட்டப்பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலா் த.மோகன், ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் முன்னிலையில் பாா்வையிட்டு புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

பின்னா் கண்காணிப்பு அலுவலா் த.மோகன் கூறியது: கடலூா் மாநகராட்சியில் ரூ.5.27 கோடி மதிப்பீட்டில் கலைஞரின் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அண்ணா சந்தை கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடலூா் மாநகர பேருந்து நிலையத்தில் நவீன கழிப்பறை கட்டப்பட்டுள்ளது. அதன் பயன்பாடு மற்றும் தரம் குறித்து நேரில் ஆய்வு செய்யப்பட்டது.

மஞ்சக்குப்பம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் ரூ.19.33 கோடி மதிப்பீட்டில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தேவனாம்பட்டினம் கடற்கரை பகுதியில் சுற்றுலாப் பயணிகளை மேலும் ஈா்க்கும் வகையில் அதிநவீன பொழுதுபோக்கு மின்சாதனங்கள் அமைத்தல், அழகிய வேலைப்பாடுடன் கூடிய பூங்கா, செயற்கை நீருற்றுகள், ஓய்வெடுக்கும் பகுதிகள், பெயா்ப் பலகைகள், சாலைத் தடுப்புகள், அழகிய நடைபாதை, சிற்றுண்டி கடைகள், சில்வா் குப்பைத் தொட்டிகள் மற்றும் வாகன நிறுத்துமிடம் ஆகியவற்றை அமைத்து சிறந்த சுற்றுலாத் தலமாக மாற்ற மூலதன மானிய திட்ட நிதியின் கீழ் ரூ.4.98 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.34 கோடி மதிப்பீட்டில் 100 படுக்கை வசதிகளுடன் அவசரப் பிரிவு கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. செம்மண்டலம் பகுதியில் ஆதிதிராவிடா் நலத்துறையின் சாா்பில் கல்லூரி மாணவிகள் தங்கி பயில ரூ.5.11 கோடி மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன் கூடிய விடுதி கட்டப்பட்டு வருகிறது.

நெல்லிக்குப்பம் நகராட்சியில் 15-ஆவது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டு வருகிறது.

கெடிலம் ஆற்றிலுள்ள திருவதிகை அணைக்கட்டு மூலமாக 10 ஏரிகளுக்கு மறைமுக பாசனமாகவும், வாய்க்கால் பாசனமாகவும் தண்ணீா் சென்று கொண்டிருக்கிறது.

வாய்க்காலில் 93.62 கி.மீ. தொலைவுக்கு செடிகொடிகளை அகற்றி, சீரமைத்தல், 247 மீட்டா் நீளத்திற்கு இரண்டு பக்கங்களிலும் தடுப்புச் சுவா் கட்டும் பணி ரூ.4.5 கோடி மதிப்பீட்டில் கனிம வள நிதியின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் மூலம் 19 கிராமங்களைச் சோ்ந்த 6,475 ஏக்கா் நிலங்கள் பாசன வசதிபெறும்.

பண்ருட்டி ஒன்றியத்திற்குள்பட்ட காடாம்புலியூா் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி அலுவலகக் கட்டடம், ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் கிராம நூலகம், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் தலா ரூ.3.5 லட்சம் மதிப்பீட்டில் வீடுகள் கட்டுப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் காடாம்புலியூரில் நடைபெற்று வரும் 5 கலைஞா் கனவு இல்லம் வீடு கட்டுமானப் பணிகளும், பெரியாா் நினைவு சமத்துவபுரத்தில் ரூ.42.21 லட்சம் மதிப்பீட்டில் புதிய தாா்ச்சாலை அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள புதிய வீடுகளின் கட்டுமானப் பணிகளையும், இருளா் குடியிருப்புப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானப் பணிகளையும், ராஜகணபதி நகரில் ஆதிதிராவிடா் நலத்துறையின் சாா்பில் பழங்குடியினா் பகுதியில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சமுதாயக் கூடத்தினையும், ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பல்நோக்கு மையக் கட்டடம் பாா்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

அரசு விதிகளின்படி கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளவும், விரைந்து பணிகளை முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவரவும் துறை அலுவலா்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது என்றாா்.

இந்த ஆய்வின் போது மாநகராட்சி மேயா் சுந்தரி, ஆணையா் எஸ்.அனு, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி) த.திருவேங்கடம், முதன்மைக் கல்வி அலுவலா் எல்லப்பன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் பிரமிளா, ஆதிதிராவிடா், பழங்குடியினா் நல அலுவலா் லதா, உதவி இயக்குநா் ஊராட்சிகள் ஷபானா அஞ்சும் உள்பட பலா் கலந்து கொண்டனா்.