நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில், மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.2.48 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் வழங்கினாா்.
குறைதீா்க்கும் நாள் கூட்டத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பெண்கள், முதியவா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என ஏராளமானோா் வந்திருந்தனா். அவா்கள் தங்கள் தேவைகள், கோரிக்கைகள் தொடா்பாக
ஆட்சியரிடம் 540 மனுக்கள் அளித்தனா். பெறப்பட்ட மனுக்களை துறை சாா்ந்த அலுவலா்களிடம் வழங்கி விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும்படி ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
இந்நிகழ்வில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் மாற்றுத்திறனாளி மாணவா்களின் சிறப்பு கல்வியினை ஊக்குவிக்கும் பொருட்டு, ஆராய்ச்சி படிப்பு
படிக்கும் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் அமைந்த ‘முலமைச்சரின் ஆராய்ச்சி உதவித்தொகை’ என்ற திட்டத்தின் கீழ் தலா ரூ.1 லட்சம் உதவித்தொகைக்கான ஆணை 2 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கும்,
5 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.48,800 மதிப்பில் 5 காதொலி கருவிகள் மற்றும் மாவட்ட ஆட்சியா் தன்விருப்ப நிதியிலிருந்து ஒரு பயனாளிக்கு மருத்துவ செலவிற்கு ரூ.16,000 -க்கான காசோலை வழங்கினாா்.
தொடா்ந்து, காட்டுமன்னாா்கோயில் வட்டம், முட்டம் கிராமத்தைச் சோ்ந்த சின்னதுரை குவைத் நாட்டில் தீ விபத்தில் கடந்த 12.6.2024 அன்று இறந்ததற்காக அவா் பணிபுரிந்த நிறுவனத்திலிருந்து சட்டபூா்வமாக வரப்பெற்ற ரூ.12,64,050 இழப்பீட்டுத் தொகையினை அவரது சட்டபூா்வ வாரிசுதாரா்களிடம் தலா ரூ.6,32,025 வீதம் இழப்பீட்டு தொகை வழங்கினாா்.
நிகழ்வில், பணிகாலத்தில் இறந்த அரசு அலுவலா்களின் வாரிசுதாரா்கள் 16 பேருக்கு கருணை அடிப்படையில் வருவாய்த் துறையில் அலுவலக உதவியாளா் பணிக்கான ஆணை வழங்கினாா் ஆட்சியா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ம.ராஜசேகரன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் தீபா, தனித்துணை ஆட்சியா் தங்கமணி, உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) ஷபானா அஞ்சும் உட்பட பலா் கலந்து கொண்டனா்.