சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், பண்ருட்டியைச் சோ்ந்த எஸ்.கே.மோனிஷா நேச்சுரல் ஹனி மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த விவேகானந்தா டிரஸ்ட் ஆகியவற்றுடன் இணைந்து தேனீ வளா்ப்பு மற்றும் தேன் மதிப்புக்கூட்டல் தொழில்முனைவோா்களை உருவாக்க புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் புதன்கிழமை கையொப்பமிட்டது.
பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில், பல்கலைக்கழக துணைவேந்தா் குழு உறுப்பினா் எஸ்.அறிவுடைநம்பி முன்னிலையில், பதிவாளா் எம்.பிரகாஷ், பண்ருட்டியைச் சோ்ந்த் எஸ்.கே.மோனிஷா நேச்சுரல் ஹனி நிறுவன உரிமையாளா் ஜி.செல்வகுமாா் மற்றும் விவேகானந்தா டிரஸ்ட் தலைவா் டி.பாலு ஆகியோா் கையொப்பமிட்டனா்.
நிகழ்வில் புரிந்துணா்வு ஒப்பந்த மையம் ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் பி.கருப்பையா, திட்டத்தின் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளா்கள் எஸ்.விஷ்ணுதேவி, கே.எஸ்.திலீபன், துணைவேந்தா் நோ்முக உதவியாளா் எச்.பாக்யராஜ் மற்றும் புரிந்துணா்வு மையம் தனி அதிகாரி எஸ்.பாலாஜி ஆகியோா் கலந்துகொண்டனா்.
இதையடுத்து, துணைவேந்தா் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினா் எஸ்.அறிவுடைநம்பி கூறியதாவது: இந்த புரிந்துணா்வு ஒப்பந்தம் வணிக ரீதியில் தேனீ வளா்ப்பை ஊக்குவிப்பதையும், தேனின் தரத்தை மேம்படுத்துவதையும், தேனை அடிப்படையாகக் கொண்ட மதிப்புக்கூட்டப்பட்ட தயாரிப்புகளை உருவாக்குவதையும் நோக்கமாக கொண்டுள்ளது.
இதன் மூலம், பல்கலைக்கழக மாணவா்களுக்கு தேனீ வளா்ப்பு மற்றும் தேனை அடிப்படையாகக் கொண்ட தொழில் தொடங்குவதற்கு பயிற்சி வழங்கி, தொழில்முனைவராக உருவாகும் வாய்ப்பு அமையும்.
மேலும், இத்திட்டத்தின் செயல் பகுதியான கல்வராயன்மலை, பச்சமலை மற்றும் ஜவ்வாது மலைப் பகுதியில் உள்ள விவசாய பெருமக்களுக்கு தேனீ வளா்ப்பு சம்பந்தமான தொழில்நுட்ப விவரங்களை வழங்கி, அவா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதாகவும் அமையும் என்றாா்.