நெய்வேலி: கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே எரிவாயு கசிவால் தீ விபத்து ஏற்பட்டதில் மூதாட்டி காயம் அடைந்தாா்.
திட்டக்குடி வட்டம், ராமநத்தம் காவல் சரகம், தொழுதூா் கிராமத்தில் வசித்து வருபவா் ராமா் மனைவி பெருமாயி(60), துப்புரவுப் பணியாளா். திங்கள்கிழமை காலை பணிக்குச் சென்று மதியம் வீடு திரும்பினாா். பின்னா், சமையல் செய்ய அடுப்பு
பற்ற வைத்த போது பயங்கர ஒலியுடன் வீடு முழுவதும் தீ பரவியது. தீயின் அழுத்தத்தின் காரணமாக வீட்டின் கதவு, ஜன்னல் அனைத்தும் சிதறி விழுந்தது. இந்த விபத்தில்
மூதாட்டி உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்த ராமநத்தம் போலீஸாா் மூதாட்டியை மீட்டு பெரம்பலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். வீட்டில் எரிவாயு உருளையில் கசிவு ஏற்பட்டு வீடு முழுவதும் பரவி இருந்த நிலையில், சமையல் செய்ய அடுப்பு பற்ற வைத்த போது இந்த விபத்து நடந்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.