நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு மண் பானை, அடுப்புடன் வந்த மண் பாண்டத் தொழிலாளா்கள், மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்தனா்.
கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் குறை தீா்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளா்கள் சங்கத்தினா் வந்திருந்தனா். அவா்கள் அளித்த மனுவில், பொங்கலுக்கு மண் அடுப்பு, மண் பானை பொருள்களை ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு வழங்க வேண்டும். மாவட்டத் தொழில் மையத்தின் மூலம் மானிய கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வீடு இல்லாத மண்பாண்டத் தொழிலாளா்களுக்கு வீடு வழங்க வேண்டும். மண்பாண்டப் பொருட்கள் விற்பனை செய்வதற்கு தமிழக அரசு உழவா் சந்தையில் கடை ஒதுக்கீடு செய்ய வேண்டும். மழைக்கால நிவாரண நிதி காதி கிராப்ட் மூலமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இருந்தனா். பின்னா் அவா்கள் , மாவட்டத் தலைவா் குமாா் தலைமையில் ஆட்சியரை சந்தித்து மனு அளித்துச் சென்றனா்.