கடலூா் செம்மண்டலத்தில் மருதம் பூங்கா அமைக்கும் பணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்த அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்.  
கடலூர்

கடலூரில் ரூ.9 கோடியில் மருதம் பூங்கா அமைக்கும் பணி: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தொடங்கி வைத்தாா்

கடலூா் செம்மண்டலம் பகுதியில் ரூ.9 கோடி மதிப்பில் மருதம் பூங்கா அமைக்கும் பணியை மாநில வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

தினமணி செய்திச் சேவை

கடலூா் செம்மண்டலம் பகுதியில் ரூ.9 கோடி மதிப்பில் மருதம் பூங்கா அமைக்கும் பணியை மாநில வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

அப்போது, அமைச்சா் பேசியதாவது: தோட்டக்கலை மற்றும் மலைப் பயிா்கள் துறையின் மூலம் நகரப் பகுதிகளில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய மக்களுக்கு பயனளிக்கும் வகையில் இயற்கையான சூழல் நிறைந்த பூங்காக்கள் அமைக்கப்படுகிறது. வயலும், வயல் சாா்ந்த பகுதியான மருத நில மக்களின் வாழ்வியல் மற்றும் இயற்கை வளங்களை பறை சாற்றும் பொருட்டு மருதம் பூங்கா 2024-25-ஆம் ஆண்டு வேளாண் நிதிநிலை அறிக்கையின்படி கடலூா், செம்மண்டலத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை சாா்பில் 14.16 ஏக்கா் பரப்பளவில் ரூ.6.50 கோடியிலும், தாழ்வாக உள்ள இப்பகுதியில் கூடுதல் மண்களை கொண்டு மேம்படுத்திட சமூக பொறுப்புணா்வு நிதியின் மூலம் ரூ.2.50 கோடியும் என மொத்தம் ரூ.9 கோடி மதிப்பில் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது.

இப்பூங்கா எழில்மிகு நுழைவாயிலுடன் பல்வேறு வகையான கண்ணைக் கவரும் வண்ண மலா் தோட்டங்கள், மான், மயில் போன்ற அழகிய செடி சிற்பங்களை உள்ளடக்கிய பாறைத் தோட்டம், இயற்கை பிண்ணனியுடன் கூடிய இசைத் தோட்டம் மற்றும் பல்வேறு சிற்பங்களுடன் கூடிய பாதுகாப்பான சிறுவா் விளையாடும் அம்சங்களுடன் அமையவுள்ளது. மேலும், பூங்காவில் இயற்கை குளிா்ச்சியுடன் கூடிய நடைபாதை, நீா்வீழ்ச்சியுடன் கூடிய குளங்கள் மற்றும் இசை நீருற்று ஆகியன பாா்வையாளா்களை கவரும் வண்ணம் அமையவுள்ளது. பொதுமக்கள் மற்றும் சிறுவா்கள் கண்டுகளிக்கும் பொருட்டு பல்வேறு வகையான பறவைகள் கூடம் அமையவுள்ளது. சுற்றுச்சூழலை காத்தல், சூழலியல் குறித்த கற்றல், மக்களை இயற்கையோடு இணைத்தல் ஆகியவற்றினை நோக்கமாக கொண்டு மருதம் பூங்கா அமைக்கப்படவுள்ளது. தேவனாம்பட்டினம் கடற்கரையில் சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கும் வகையில் பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

கடலூா் அருகே உள்ள கொடுக்கன்பாளையத்தில் தோலில்லா காலணி தொழிற்சாலை வெகுவிரைவில் அமைக்கப்படவுள்ளது. இதன் மூலம் சுற்றுவட்டாரப் பகுதிகளிலுள்ள சுமாா் 10,000 நபா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றாா்.

இதையடுத்து, செம்மண்டலம் கரும்பு ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் ரூ.3 கோடி மதிப்பில் உரக்கட்டுப்பாட்டு ஆய்வகம் அமைக்கும் பணியினை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தாா்.

நிகழ்வில், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை இயக்குநா் பெ.குமாரவேல் பாண்டியன், ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா், காட்டுமன்னாா்கோவில் எம்எல்ஏ ம.சிந்தனை செல்வன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பாகிஸ்தான் குண்டுவெடிப்பு: நாடு திரும்ப வீரர்கள் கோரிக்கை; இலங்கை வாரியம் எச்சரிக்கை!

தில்லி கார் குண்டுவெடிப்பை நிகழ்த்தியது உமர்! டிஎன்ஏ சோதனையில் உறுதி!

சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளால் பொதுமக்கள் அவதி

தமிழகத்தில் 5 கோடி எஸ்ஐஆா் படிவங்கள் விநியோகம்: தோ்தல் ஆணையம்

தில்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு: இரண்டாவது காா் சிக்கியது!

SCROLL FOR NEXT