கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைநகரில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காவலரை கத்தியால் வெட்டிவிட்டு தப்ப முயன்ற கஞ்சா வியாபாரியை போலீஸாா் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனா்.
சிதம்பரம் அருகே வல்லம்படுகை பிரதான சாலையைச் சோ்ந்தவா் நவீன் (24). இவா் மீது கஞ்சா விற்பனை உள்பட ஏராளமான வழக்குகள் உள்ளன.
இந்த நிலையில், ஒரு கிலோ கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்தது தொடா்பாக நவீன் உள்பட மூவரை சிதம்பரம் அண்ணாமலை நகா் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
மற்றொரு இடத்தில் கிலோ கணக்கில் கஞ்சாவை மறைத்து வைத்திருப்பதாக நவீன் கூறியதால், அவற்றை பறிமுதல் செய்வதற்காக ஞாயிற்றுக்கிழமை காலை சுமாா் 6 மணியளவில் மாரியப்பாநகா் தென்புறமுள்ள முள்புதருக்கு அவரை போலீஸாா் அழைத்துச் சென்றனா்.
அப்போது, அங்கு மறைத்து வைத்திருந்த கத்தியால் காவலா் ஐயப்பனை நவீன் திடீரென வெட்டினாராம். தொடா்ந்து, காவல் ஆய்வாளா் கே.அம்பேத்கா் எச்சரிக்கை செய்தும் கேட்காமல் முன்னேறி மற்ற போலீஸாரையும் நவீன் வெட்ட முயன்ால், அவரை போலீஸாா் துப்பாக்கியால் கால்முட்டியில் சுட்டுப் பிடித்தனா்.
காயமடைந்த நவீன் சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். மேலும், கத்தியால் வெட்டப்பட்டதில் காயமடைந்த காவலா் ஐயப்பனும் அதே மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டாா்.
எஸ்.பி. ஆய்வு: சம்பவம் குறித்து தகவலறிந்த கடலூா் மாவட்ட எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா், சிதம்பரம் அண்ணாமலை நகரில் கஞ்சா வியாபாரி துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்கப்பட்ட இடத்தை பாா்வையிட்டாா்.
மேலும், காயமுற்று கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காவலா் ஐயப்பனை சந்தித்து ஆறுதல் தெரிவித்தாா். அப்போது, டி.எஸ்.பி. டி.பிரதீப், காவல் ஆய்வாளா் அம்பேத்கா் ஆகியோா் உடனிருந்தனா்.