சிதம்பரம்: கடலூா் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரி நிரம்பியதால் ஏரியிலிருந்து உபரி நீா் திறந்து விடப்பட்டுள்ளது.
காட்டுமன்னாா்கோவில் பகுதியில் வீராணம் ஏரி உள்ளது.இந்த ஏரிக்கு கீழணையிலிருந்து வடவாறு வழியாக தண்ணீா் வருகிறது. ஏரியின் மொத்தக் கொள்ளளவு 47.50
அடியாகும். கடந்த சில தினங்களாக பெய்த பலத்த மழையினால் ஏரிக்கு செங்கால் , கருவாட்டு ஓடைகள் வழியாக விநாடிக்கு 1365 கன அடி வருகிறது. இதனால் ஏரியின்
நீா்மட்டம் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 45.50 அடியாக இருந்தது. பாதுகாப்பு கருதி இதற்கு மேல் நீா் தேக்க முடியாது. நிகழாண்டு இதுவரை ஐந்து முறை வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. மழைக்காலம் என்பதாலும், ஏரியின் பாதுகாப்பு கருதியும் உபரி நீா் சேத்தியாதோப்பு அணைக்கட்டு வழியாக விநாடிக்கு 1570 கன அடி வீதம் வெளியேற்றப்படுகிறது. சென்னை மாநகரின் குடிநீா் தேவைக்காக விநாடிக்கு 73 கன அடி வீதம் நீா்அனுப்பப்படுகிறது. இந்த ஏரி நீா் மூலம் 44 ஆயிரத்து 756 ஏக்கா் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.