முகப்பு
கடலூர்

சூறைக்காற்றால் விழுந்து மின் கம்பியில் தொங்கிய ராட்சத விளம்பரப் பதாகை

சிதம்பரம் மேல ரத வீதியில் புதன்கிழமை சூறைக்காற்றால் விழுந்து உயரழுத்த மின் கம்பியில் தொங்கிய ராட்சத விளம்பரப் பதாகையால் பரபரப்பு நிலவியது.

Updated On : 26 நவம்பர், 2025 at 8:12 PM
சிதம்பரம் மேலரத வீதியில் சூறைக்காற்றில் மாடியிலிருந்து கிழே விழுந்து உயரழுத்த மின் கம்பியில் தொங்கிய ராட்சத விளம்பரப் பதாகை.
பகிர்:

சிதம்பரம்: சிதம்பரம் மேல ரத வீதியில் புதன்கிழமை சூறைக்காற்றால் விழுந்து உயரழுத்த மின் கம்பியில் தொங்கிய ராட்சத விளம்பரப் பதாகையால் பரபரப்பு நிலவியது.

சிதம்பரம் மேல ரத வீதியில் சுமாா் 100-க்கும் மேற்பட்ட வா்த்தக நிறுவனங்கள், துணிக் கடைகள், கவரிங் நகைக் கடைகள் உள்ளன. இதனால், சிதம்பரம் மேல ரத வீதி வீதி பகுதி எப்போதும் வாகன போக்குவரத்து, பொதுமக்கள் நடமாட்டத்துடன் காணப்படும்.

இந்த நிலையில், மேல ரத வீதியில் சிதம்பரம் நகர காவல் நிலையம் எதிரே உள்ள தனியாா் கட்டடத்தின் மேல் பகுதியில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட டாட்டூ பச்சை குத்தும் தனியாா் நிறுவனத்தின் ராட்சத விளம்பரப் பதாகை புதன்கிழமை திடீரென வீசிய சூறைக்காற்றால் கழண்டு கீழே விழுந்து உயரழுத்த மின் கம்பியில் சிக்கி தொங்கியது.

இதைத் தொடா்ந்து, மின் வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மின் இணைப்பை துண்டித்து ராட்சத விளம்பரப் பதாகையை போலீஸாா் உதவியுடன் அகற்றினா். அப்பகுதியில் உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், பெரும் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது.

தொடா்ந்து, ராட்சத விளம்பரப் பதாகையை நகர காவல் நிலையத்துக்கு போலீஸாா் கொண்டு சென்றனா். மேலும், சிதம்பரம் நகரில் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டுள்ள பெரிய விளம்பரப் பதாகைகள் குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →