கடலூா் மாவட்டம், விருத்தாசலம், பண்ருட்டி பகுதிகளில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உள்பட இருவா் உயிரிழந்தனா்.
பண்ருட்டி வட்டம், புலவனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கதிரவன் (32), டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவா், செவ்வாய்க்கிழமை மேல்பட்டாம்பாக்கத்தில் ஒரு வீட்டில் டைல்ஸ் ஒட்டும் பணிக்காக சென்றாராம்.
அப்போது, அங்கு இரும்பு டேப் கொண்டு அளவீடு செய்தபோது, டேப் மடிந்து அருகில் சென்ற உயரழுத்த மின் கம்பியில் பட்டதில் உடலில் மின்சாரம் பாய்ந்து கதிரவன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், நெல்லிக்குப்பம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
விவசாயி உயிரிழப்பு: விருத்தாசலம் வட்டம், காா்கூடல் கிராமத்தைச் சோ்ந்தவா் கலியபெருமாள் (79). இவா், திங்கள்கிழமை தனது வயலில் வேலை செய்துகொண்டிருந்தாா்.
காலை சுமாா் 9.30 மணி அளவில் மோட்டா் கொட்டகையில் கம்பியில் தொங்கவிடப்பட்டிருந்த சாப்பாட்டை எடுக்க முயன்றாராம். அப்போது, உடலில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், விருத்தாசலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.