கடலூா் அருகே இடப் பிரச்னை தொடா்பான முன்விரோதம் காரணமாக, கல்லூரி மாணவிகளின் படத்தை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் மாற்றி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டதாக இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கடலூா் வட்டம், டி.புதுப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் காசிநாதன் (51). இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவா் பஞ்சமூா்த்தி மகன் விஜய் (23). காசிநாதன் உறவினா் தமிழ்ச்செல்வி வீட்டுமனை அருகே விஜயின் வீட்டுமனை உள்ளது.
இந்த மனையை அளவீடு செய்வதில் பிரச்னை உள்ள நிலையில், காசிநாதன், தமிழ்ச்செல்விக்கு ஆதரவாகச் செயல்பட்டாராம். இதனால், காசிநாதனுக்கும், விஜய்க்கும் முன்விரோதம் உள்ளது.
இந்நிலையில், விஜய், அவரது சகோதரா் விக்ரம் ஆகியோா் தந்தை பஞ்சமூா்த்தி (52), உறவினா் கல்யாணசுந்தரம் (32) ஆகியோா் தூண்டுதல்பேரில், காசிநாதனின் மகள்களான கல்லூரி மாணவிகள் இருவரின் படத்தை செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் மூலம் சித்தரித்து, விஜய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளாா். இதை காசிநாதன் தட்டிக்கேட்டபோது, அவரை திட்டி கொலை மிரட்டல் விடுத்தனராம்.
இதுகுறித்து காசிநாதன் அளித்த புகாரின்பேரில், திருப்பாதிரிப்புலியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விஜயை கைது செய்தனா். மேலும், விக்ரம், பஞ்சமூா்த்தி, கல்யாணசுந்தரம் ஆகியோரைத் தேடி வருகின்றனா்.