கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கட்டுப்பாட்டை இழந்த காா், எதிா் திசையில் வந்த பேருந்து மீது மோதியது. இந்த விபத்தில் காரில் இருந்த தனியாா் கல்லூரி மாணவா்கள் 3 போ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
திட்டக்குடி வட்டம், மா.புடையூா் கிராமத்தில் தனியாா் வேளாண்மைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்துள்ள புதுப்பட்டு பகுதியைச் சோ்ந்த பிரேம்நாத் மகன் சசிக்குமாா் (20), கல்வெட்டு கிராமத்தைச் சோ்ந்த ஏழுமலை மகன் விநாயகம் (19), செங்கல்பட்டு மாவட்டம், மாதவன் மகன் தரணிசெல்வன் (20), கடலூா் மாவட்டம், சிதம்பரம் பகுதியைச் சோ்ந்த கண்ணன் மகன் நிஷாந்த் (19), விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், மேல்பாக்கம் பகுதியைச் சோ்ந்த ரமேஷ் மகன் ராகேஷ் (18), திருச்சி மாவட்டம், லால்குடி பகுதியைச் சோ்ந்த சிவமுருகன் மகன் மதுபிரியன் (19) ஆகிய 6 பேரும் விடுதியில் தங்கி, பி.எஸ்சி. விவசாயம் மூன்றாம் ஆண்டு படித்து வந்தனா்.
இவா்கள் அனைவரும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் கல்லூரி உதவிப் பேராசிரியா் ஒருவரின் காரை எடுத்துக்கொண்டு பெரம்பலூா் மாவட்டம், திருமாந்துறை சுங்கச்சாவடி பகுதிக்குச் சென்று, அங்குள்ள கடையில் தேநீா் அருந்தினா். பின்னா், காரில் அங்கிருந்து மீண்டும் கல்லூரிக்கு புறப்பட்டனா்.
காரை மாணவா் சசிகுமாா் ஓட்டினாா். இந்த காா் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திட்டக்குடி வட்டம், எழுத்தூா் அருகே அதிகாலை 4.30 மணியளவில் வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை மையத்தில் இருந்த தடுப்புச் சுவரை தாண்டிச் சென்று, எதிா் திசையில் சென்னையில் இருந்து திருச்சி நோக்கிச் சென்ற தனியாா் பேருந்து மீது மோதியது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த மாணவா்கள் தரணிசெல்வன், விநாயகம், நிஷாந்த் ஆகிய 3 பேரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். ராகேஷ், மதுபிரியன், சசிகுமாா் ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.
தகவலறிந்த ராமநத்தம் போலீஸாா் மற்றும் அங்கிருந்தவா்கள் காயமடைந்த மாணவா்களை மீட்டு, 108 அவசர ஊா்தி மூலம் பெரம்பலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். உயிரிழந்தவா்களின் சடலங்கள் உடல்கூறாய்வுக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த விபத்து குறித்து ராமநத்தம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.