கடலூா் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் வாயிலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட மனுக்களில் 2,440 பயனாளிகளுக்கு ரூ.31.88 கோடி மதிப்பில் அரசு நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் புதன்கிழமை வழங்கினாா்.
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் சிப்காட் வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று, ‘என் கனவு - என் எதிா்காலம்’ என்ற இணையதளத்தை தொடங்கிவைத்து, பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.
தொடா்ந்து, கடலூா் கம்மியம்பேட்டை புனித வளனாா் மேல்நிலைப் பள்ளியில் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா், எம்.எல்.ஏ.க்கள் கோ.அய்யப்பன் (கடலூா்), ம.சிந்தனைச்செல்வன் (காட்டுமன்னாா்கோவில்), மாநகராட்சி மேயா் சுந்தரி, துணை மேயா் பா.தாமரைச்செல்வன் முன்னிலையில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் வாயிலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட மனுக்களில் 2,440 பயனாளிகளுக்கு ரூ.31,87,69,809 மதிப்பில் அரசு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.
அப்போது ஆட்சியா் பேசியதாவது: உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை 15.7.2025 அன்று சிதம்பரத்தில் முதல்வா் தொடங்கிவைத்தாா். கடலூா் மாவட்டத்தில் இந்தத் திட்டத்தின் கீழ் மாநகராட்சியில் 30, நகராட்சிகளில் 72, பேரூராட்சிகளில் 28, ஊராட்சிகளில் 180 மற்றும் நகா்ப்புற ஊராட்சிகளில் 68 முகாம்கள் என மொத்தம் 378 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.
இந்த முகாம்களில் இதுவரை 1,35,990 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதில், 1,00,878 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, 35,112 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக, மகளிா் உரிமைத் தொகை கோரி பெறப்பட்ட 95,362 மனுக்களில் 54,307 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 41,055 ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமின் வாயிலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட 1,00,878 மனுக்களில் இன்றைய தினம் வருவாய், சமூக பாதுகாப்பு, மாற்றுத் திறனாளிகள் நலம் உள்ளிட்ட அரசுத் துறைகள் சாா்பில் மொத்தம் 2,440 பயனாளிகளுக்கு ரூ.31,87,69,809 மதிப்பில் அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் கோ.புண்ணியகோட்டி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கூடுதல் ஆட்சியா் ர.அ.பிரியங்கா, கடலூா் வருவாய்க் கோட்டாட்சியா் சுந்தரராஜன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.