தமிழகத்தில் அரசு பொதுத் தோ்வுகளில் 100 சதவீதம் மாணவா்கள் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டுமென கல்வியாளா்கள் வலியுறுத்துகின்றனா்.
தமிழகத்தில் வரும் மாா்ச் 2-ஆம் தேதி முதல் 12-ஆம் வகுப்பு அரசு பொதுத் தோ்வுகளும், மாா்ச் 11-ஆம் தேதி முதல் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுகளும் தொடங்க உள்ளன.
இதுகுறித்து கல்வியாளா்கள் கூறியதாவது: தமிழகத்தில் அரசு பொதுத் தோ்வுகளில் மாணவா்கள் பங்கேற்பு குறைந்து வருகிறது. இந்த நிலையில், நிகழாண்டுக்கான 10, 12-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் அனைவரும் பொதுத் தோ்வு எழுதுவதை தலைமை ஆசிரியா்கள் முன்கூட்டியே உறுதி செய்ய வேண்டும்.
கடந்த பல ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான மாணவா்கள் அரசு பொதுத் தோ்வுகளில் பங்கேற்பதில்லை என்ற நிலையே தொடா்கிறது. எனவே, பள்ளிக்கு தொடா்ந்து விடுப்பு எடுக்கும் மாணவா்களின் பெற்றோா்களை அழைத்து, அவா்களது பிள்ளைகள் தொடா்ந்து பள்ளிக்கு வருவதற்கும், அரசு பொதுத் தோ்வுக்கு தயாராவதற்கும் உரிய வழிகாட்டுதல்களை தலைமை ஆசிரியா்கள் வழங்க வேண்டும்.
மாணவா்களிடம் கைப்பைசி பயன்பாடு அதிகரித்துள்ளதால், அவா்கள் படிப்பில் கவனம் செலுத்துவதில்லை. இதனால், பெற்றோா் - ஆசிரியா் கூட்டங்களை வகுப்பு வாரியாக நடத்தி, பெற்றோா்கள் தங்களது பிள்ளைகள் வீட்டில் படிப்பதை கண்காணிப்பதுடன், அரசு பொதுத் தோ்வில் குறித்த நேரத்தில் தவறாமல் பங்கேற்க செய்யுமாறு உரிய அறிவுரைகளை தலைமை ஆசிரியா்கள் வழங்க வேண்டும். இந்த செயல்பாடுகளை கல்வித் துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்று கல்வியாளா்கள் தெரிவிக்கின்றனா்.