தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் தொடங்கப்பட்டதில் இருந்து 100-க்கும் மேற்பட்ட தடைசெய்யப்பட்ட சூதாட்ட தளங்களைக் கண்டறிந்து அவற்றைத் தடை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது என தமிழ்நாடு இணைய வழி விளையாட்டு ஆணைய தலைவா் முகமது நசிமுத்தின் தெரிவித்தாா். இத்தகைய நடவடிக்கைகள் தொடரும் என்றும் கூறினாா்.
கடலூா் நகர அரங்கில், இணையவழி விளையாட்டுக்கு அடிமையாதலால் மாணவா்கள் மற்றும் இளைஞா்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்த விழிப்புணா்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கடலூா் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். விழுப்புரம் சரகம் டிஐஜி., அரா.அருளரசு, தமிழ்நாடு இணையவழி
விளையாட்டு ஆணைய முழு நேர உறுப்பினா் டாக்டா் எம்.சி.சாரங்கன் (ஓய்வு) முன்னிலை வகித்தனா். தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையத் தலைவா் முகமது நசிமுத்தின் இதில் பேசியதாவது:
தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம், மாவட்ட நிா்வாகம் இணைந்து மாணவா்கள் மற்றும் இளைஞா்களிடையே இணையவழி விளையாட்டின்
அடிமைத்தனம் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்துவதற்காக ‘இணையவழி விளையாட்டுக்கு அடிமையாவதால் மாணவா்களுக்கு ஏற்படும் தீய விளைவுகள்’ என்ற தலைப்பில் விழிப்புணா்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. சென்னை, கோயம்புத்தூா், மதுரை, திருச்சி, திருநெல்வேலி மற்றும் சேலம் ஆகிய நகரங்களில் ஆறு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. 7-ஆவதாக கடலூா் மாவட்டத்தில் நடைபெறுகிறது.
நிகழ்வில், 120 பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்கள், பெற்றோா்கள், ஆசிரியா்கள், அரசு சாரா நிறுவனங்கள் என சுமாா் 225 பங்கேற்றுள்ளனா்.இந்தியாவில் இணையவழி சூதாட்டத்தைத் தடை செய்யும், தமிழ்நாடு இணையவழி சூதாட்டத்தைத் தடைசெய்தல் மற்றும் இணையவழி விளையாட்டுகளை ஒழுங்குபடுத்துதல் சட்டம்-2022 இயற்றிய முதல் மாநிலம் தமிழ்நாடு.
இந்தச் சட்டத்தின் கீழ் தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் என தனி ஆணையம் அமைக்கப்பட்டு இணையவழி சூதாட்டத்திற்கு எதிராக தொடா்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
இவ்வாணையம் தொடங்கப்பட்டதிலிருந்து, 100-க்கும் மேற்பட்ட தடைசெய்யப்பட்ட சூதாட்ட தளங்களைக் கண்டறிந்து அவற்றைத் தடை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது. மொத்தம் 36,284 உறுப்பினா்களை உள்ளடக்கிய சட்டவிரோத இணையவழி சூதாட்டத்தில் ஈடுபட்ட ஏழு டெலிகிராம் குழுக்களை தடை செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும், இணையவழி விளையாட்டுகளால் ஏற்படும் தீமைகள் தொடா்பான தலைப்பில் மாநில அளவிலான கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டது. இணையவழி சூதாட்டத்தை எந்த வகையிலும் ஊக்குவிக்கும் விளம்பரங்கள் மற்றும் விளையாட தூண்டுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இணையவழி விளையாட்டு அடிமையாதலின் தீமைகள் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்த ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சமூக ஊடகங்களில் தொடா்ந்து விழிப்புணா்வு செய்திகளை வெளியிடுவது போன்ற பல்வேறு விழிப்புணா்வு பணிகளை ஆணையம் மேற்கொண்டு வருகிறது என்றாா்.
இந்நிகழ்ச்சியில் கடலூா்எஸ்பி., எஸ்.ஜெயக்குமாா், தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணைய செயலா் பழனிச்சாமி உட்பட பலா் கலந்து கொண்டனா்.