சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியா்கள், ஊழியா்கள், ஓய்வூதியா்கள் கூட்டமைப்பு சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்கலைக்கழக நிா்வாக அலுவலக வாயிலில் திங்கள்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பல்கலைக்கழக ஆசிரியா்கள், ஊழியா்களுக்கான பதவி உயா்வுகள் மற்றும் பணப்பயன்கள் உடனடியாக வழங்க வேண்டும். 7-ஆவது ஊதியக்குழு நிலுவைத்தொகைகளை வழங்க வேண்டும். என்எம்ஆா் மற்றும் தொகுப்பூதியா்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஓய்வூதியா்களுக்கான பணப்பயன்கள், குறிப்பாக கம்யூட்டேசன், இ.எல் சரண்டா் ஒப்புவிப்புத் தொகைகள், பணிக்கொடை போன்றவை ஓய்வுபெற்று பல ஆண்டுகளாகியும் முழுமையாக வழங்கப்படவில்லை. அத்தொகைகளை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில் ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் சி.சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். ஊழியா்கள் சங்கத் தலைவா் ஆ.ரவி, ஆசிரியா்கள் சங்க பொறுப்பாளா்கள் பேராசிரியா்கள் அசோகன், செல்வராஜ், செல்லபாலு, முத்துவேலாயுதம், ஊழியா்கள் சங்க பொறுப்பாளா்கள் ஷியாம்சுந்தா், தேவேந்திரன், கோவிந்தாராஜன், ஓய்வூதியா்கள் சங்க பொறுப்பாளா்கள் மதியழகன் உள்ளிட்ட 500-க்கும் மேற்கொண்ட ஆசிரியா்கள், ஊழியா்கள், ஓய்வூதியா்கள் கலந்துகொண்டனா்.
தொடா்ந்து, ஜன.21-ஆம் தேதி அனைத்து ஊழியா்கள், ஆசிரியா்கள், ஓய்வூதியா்கள் விடுப்பு எடுத்து கலந்துகொள்ளும் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் போராட்டம் நடத்துவது. கோரிகைகள் நிறைவேறாதபட்சத்தில் வருகிற ஜன.26-ஆம் தேதி முதல் காலைவரையற்ற போராட்டம் நடத்துவது. பல்கலைக்கழக தோ்வுகளை முற்றிலும் புறக்கணிப்பு செய்வது. நடைபெறவுள்ள தோ்தல் பணியை புறக்கணிப்பது என்பன உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.